கிராமியக்கலைஞர் பத்திரப்பன்
மேட்டுப்பாளையம், தாசம்பாளையத்தில் வசிக்கும் கிராமியக் கலைஞர் திரு.பத்திரப்பன் (வயது 87) . இவருக்கு தற்போது இந்தியாவின் பெருமை மிகு விருதில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இவருக்கு ஏற்கெனவே மாநில அரசின் கலைமாமணி மற்றும் கலைமுதுமணி உட்பட பல விருதுகளும் அளிக்கப்பட்டு உள்ளது.
இவர் நமது மேட்டுப்பாளையம் தொகுதியில் பெருவாரியான இடங்களில், கோயில்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். மேலும் விவசாயி, ஒயிலாட்டக் கலைஞர், கலை இலக்கிய பெருமன்றத்தை சேர்ந்த முற்போக்கு சிந்தனையாளர் மற்றும் பல பன்முக தன்மை கொண்டவரான திரு பத்திரப்பன் அவர்களின் நேர்காணல் முன்பு நமது மேட்டுப்பாளையம் இதழில் வெளியாகி இருந்தது. அந்த நேர்காணல் இப்போது மீண்டும்...
கிராமியக் கலைகள் உருவான வரலாறு பற்றி கூறுங்கள்?
விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலத்தில் கிராமியக் கலைகளை மனிதன் வாய்மொழியாக பேசி வளர்த்தான். இந்த கலை மொழி தோன்றுவதற்கு முன்பே தோன்றியது ஆகும். இந்த தொன்மை வாய்ந்த கலை வடிவங்கள் விஞ்ஞானம் வளர்வதற்கு முன்பு இயற்கையோடு இணைந்து வளர்ந்தன. நமது முன்னோர்கள் கதைச்சொல்லியும், ஆடியும், பாடியும், மனிதனை நெறிப்படுத்தியும், பண்படுத்தியும் நல்லதொரு பண்பாட்டு முறையை இக்கலைகளின் மூலம் அமைத்துக் கொடுத்தனர். அந்த பண்பாடுகள் தான் இப்பொழுது வரை நீடிக்கிறது.
அந்த காலத்தில் மனிதன் துணி அணிவது முதல் அனைத்திற்கும் முன் நிற்கும் சாமியை (GOD) முன் நிறுத்தி சொன்னால் தான் கேட்பார்கள். அந்த சமூக சூழல் அப்படி இருந்தது. புராணங்கள் ஆகட்டும், காவியங்கள் ஆகட்டும், பக்தி மார்க்கம் ஆகட்டும்:எல்லாம் மனிதனை மேம்படுத்த உருவானவை. இவைகளுக்கு அடிப்படை கிராமியக் கலைகளாகும்.
நமது மேட்டுப்பாளையம் விருதுகள் நிகழ்வில் திரு.பத்திரப்பன்
அவர்களுக்கு விருது அளித்த படம்
நமது ஊரில் உள்ள கிராமியக் கலைகளின் வகைகளை கூறுங்கள்?
தாசம்பாளையத்தில் தொட்டனங்கவுடர் என்பவர் இருந்தார். அவர் ஹரிசந்திரபூமி என்ற கலையை நடத்துவார். இன்றைக்கு உள்ள அதிக மக்களுக்கு ஹரிச்சந்திரனைப் பற்றி தெரியாது. ஹரிச்சந்திரன் என்பவர் பொய் சொல்லாத ஒரு கதாபாத்திரம். எந்த சூழலிலிலும் பொய் சொல்லக்கூடாது என்ற உன்னதமான கருத்தை மக்களுக்கு சொல்வதற்காக ஆடியும் பாடியும் உருவான கலையை தொட்டனங்கவுடர் அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டு நமது தொகுதி முழுவதும் கோவில் திருவிழாக்களில் நடத்தி இருக்கிறேன்.
அடுத்து வள்ளித் திருமணக்கதை. மோத்தேபாளையத்தை சேர்ந்த திருவப்பகவுண்டர், அவருக்கு எழுதப்படிக்க தெரியாது ஆனால் அதேநேரம் எல்லா பாடல்களும், ஆட்டங்களும் அற்புதமாக செய்வார். எல்லாம் வாய்மொழியாக தான் செய்வார். அத்தனையும் மனப்பாடமாக சொல்லுவார். அவரது குரல் சிறப்பாக இருக்கும். அவரை அழைத்து வந்து வள்ளித்திருமண நாடகம் நடத்துவோம். இப்பொழுதும் நடத்துகிறோம்., பகத்தூரில் இரண்யன் கூத்து இன்றும் தை மாதத்தில் 3 நாட்கள் நடத்துவார்கள்.
சிறுமுகையில் கோலாட்டக் குழு இருந்தது. இடுகம்பாளையத்தில் ஒயிலாட்டக் குழு இருந்தது. வள்ளிகும்மி குழு நமது தொகுதியில் பத்து இடங்களில் இருக்கிறது. தோலம்பாளையத்தில் நளமகராஜன் கதை என பல்வேறு கலைகள் இருக்கின்றன.. கோலாட்டம் ஒரு அற்புதமான கலை. அது பாதுகாக்காமப்படாமல் அழியும் நிலைக்கு சென்று விட்டது.. இப்படி நமது ஊரின் பல கலைகள் நமது கவனிப்பு இன்றி அழிந்து வருகிறது.
கலைகளை பாதுகாக்க ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?
இன்றைக்கு கோவில்கள் பெரும்பாலும் அரசின் கையில் தான் இருக்கிறது அரசு நினைத்தால், கிராமியக் கலைகளை நடத்த வாய்ப்பு தந்தால் கலையையும், கலைஞனையும் ஒருசேர வாழ வைக்க முடியும். அரசின் கலை பண்பாட்டுத்துறை இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
கிராமியக் கலையை பாதுகாக்க மேட்டுப்பாளையம் மக்களுக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன?
ஒவ்வொரு தெருவிலும் சாமி கோவில்கள் இல்லாத இடமே இல்லை. திருவிழாக்களுக்கு குறைந்தது ரூபாய் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை செலவு செய்கிறார்கள். கிராமியக் கலைகளுக்காக வெறும் ரூபாய் ஐந்தாயிரம் செலவு செய்தால் போதும். ஆனால் அதற்கு நாம் தயாரில்லை. சாமியின் பூஜைகள், பழக்கவழக்கங்கள் யாவும் பழமையானது.. அந்த பழமையை விரும்பக்கூடியவர்கள், பழமையை நேசிக்க கூடியவர்கள் இந்த பழமையான கிராமியக் கலைகளை மட்டும் தவிர்ப்பது ஏன்? இதனால் கலையும், கலைஞனும் அழியக்கூடும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
நீங்கள் சிறுவயதில் பார்த்த பவானி ஆற்றுக்கும் இப்பொழுது இருக்கின்ற பவானி ஆற்றுக்கும் உள்ள வித்தியாசம் சொல்லுங்கள்?
எங்களின் சிறுவயது, மேட்டுப்பாளையத்தின் பெரும் பகுதி ஆணும் பெண்ணும் ஆற்றுக்கு சென்று குடத்தில் தண்ணீர் எடுத்து வீட்டுக்கு கொண்டு வந்து குடித்தக் காலம். பிறகு வண்டியில் டின் கட்டி கொண்டு வந்த காலம். பிறகு சைக்கிளில் கொண்டு வந்தக் காலம். மின்சாரம் வந்த பின் இதெல்லாம் மறைந்தது. ஆனால் இன்று விஞ்ஞான வளர்ச்சியினால் கழிவுகள் இந்த ஆற்றில் வருவதால் பவானி ஆறு மாசுபடுகிறது. மாசுபடுவதற்கு காரணம் தொழிற்சாலைகள் தான் காரணம் என்று கூறுகிறார்கள். அப்படியானால் தெரிந்தே ஏன் பாதுகாக்க தவறுகிறார்கள்?
நீங்கள் இந்த தலைமுறை இளைஞர்களுக்கு சுற்றுசூழல் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
இன்றைய இளைஞர்கள் சமூக சிந்தனையுடன் கல்வி கற்க வேண்டும். சமூக உணர்வு இல்லாமல் குழந்தைகளை வளர்த்தால் நல்ல சம்பாத்தியம் கிடைக்கலாம். ஆனால் சமூகத்திற்கு பயன் இருக்காது. சமூக பொறுப்புடன் வளரக்கூடிய சந்ததிகளை உருவாக்க வேண்டும் என்பது தான் எனது தாழ்மையான வேண்டுகோள்.
தற்போதைய மேட்டுப்பாளையத்தின் வளர்ச்சி பற்றி உங்கள் கருத்து?
வளர்ச்சி என்பது, ஜனத்தொகை வளர்ந்திருக்கிறது. வீடுகள், கட்டிடங்கள் எண்ணிக்கை வளர்ந்திருக்கிறது.. ஆனால் நல்ல ஆரோக்கியம் இல்லை, நல்ல காற்று இல்லை, நல்ல தண்ணீர் இல்லை, நல்ல சாலைகள் இல்லை. கிராமங்களை விட்டு, விவசாயத்தை விட்டு, ஊருவிட்டு ஊருவந்தால் காசு கிடைக்கும். ஆனால் விவசாயத்தை அழித்தால் சோறுக்கு என்ன செய்வோம்? இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தின் வளர்ச்சியை பார்த்தால், வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால் இது மக்களுக்கான வளர்ச்சி அல்ல.
நேர்காணல் : இராஜேந்திரன், மஸ்தான்