63 ம் ஆண்டில் தமிழகம்


(தமிழகம்  எல்லைகள் வரையறுக்கப்பட்டு 63 ஆண்டுகள் ஆகிறது. இதனால்  இழந்ததே அதிகம் என்கிறார் கட்டுரையாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.தமிழ்நாடு நாள் உருவாக்கம் குறித்து பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்தியும், கட்டுரைகளை எழுதியும் வருபவர் திமுகவின் செய்தி தொடர்பாளரான மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.)


 




               தமிழக எல்லைகள் அமைந்த மொழிவாரி மாநிலமாக இன்றைய தமிழகம் அமைக்கப்பட்டு இன்றோடு 63 ஆண்டுகள் ( நவம்பர் 1, 2019 ) முடிகிறது. நவம்பர் 1, 1956ம் ஆண்டு இன்றைய தமிழகம் அதன் எல்லைகளோடு பிரிக்கப்பட்டு அமைந்தது.


'தமிழகம் 50' விழாவை 12 ஆண்டுகளுக்கு முன் மயிலை பாரதிய வித்யா பவனில் விழா எடுத்தேன். 'தமிழ்நாடு 50' என்ற எனது நூலும் வெளியிடப்பட்டது.


இதே நாளை ஆந்திரம் விசால ஆந்திரம் என்றும், கேரளம் நவகேரளம் என்றும், கர்நாடகா சம்யுக்த கர்நாடகம் என்றும், மகாராஷ்டிரம் சம்யுக்த மகாராஷ்டிரம் என்றும், குஜராத் மகா குஜராத் என்றும் கொண்டாடுகின்றன.



ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்த நாள் அமைந்தது குறித்து இதுவரை கவனிக்கப்படவில்லை. 2005ல் ஆனந்த விகடனில் இதுகுறித்து நான் எழுதிய கட்டுரையும் வெளியானபின்; நான் எடுத்த விழாவிற்கு பிறகே இதுகுறித்து தமிழக மக்கள் அறிந்து கொண்டனர்.


தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்த நிகழ்வினை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தியும் கலந்து கொண்டும் வருகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலை பாலு தலைமையில் 'மொழிவழி மாநிலம் அமைந்த நாள்' என்ற தலைப்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.



தெற்கே கன்னியாகுமரி அருகே நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு பகுதிகளை இழந்து அந்த பகுதி கேரளத்திற்கு சென்றதால் நெய்யாறு அணையில் தமிழகத்தின் உரிமை கேள்விக்குறியாக உள்ளது. நெல்லை மாவட்டம் அடவிநயினார், உள்ளாறு, செண்பகவல்லி அணை பிரச்சனை, அழகர் அணை பிரச்சனை (ஸ்ரீவில்லிப்புத்தூர்), தேவிகுளம், பீர்மேடு இழந்ததால் முல்லை-பெரியாறு பிரச்சனை, கொங்கு மண்டலத்தில் பாலக்காட்டு பகுதியில் உள்ள தமிழர்களுடைய கிராமங்களின் இழப்பால் பம்பாறு, சிறுவாணி, ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – புன்னம்பழா போன்ற நதிதீரப் பிரச்சனைகள், கர்நாடகத்திடம் கொள்ளேகால் போன்ற தமிழர்கள் பகுதிகளை இழந்த்தால் காவிரி, ஒகேனக்கல், தென்பென்னையாறு பிரச்சனை, ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லுர் பகுதிகளை இழந்த்தால், பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரிப் பிச்சனைகள் ஏற்பட்டுள்ளது.


கேரளத்தில் அட்டப்பாடி பிரச்சனை, கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையோர பிரச்சனையில் கேரள அரசு குடிமைப் பொருள் வழங்கும் அட்டை (ரேசன் அட்டை) வழங்கியது. இப்படியாக நாம் இழந்த பகுதிகளால் பல சிக்கல்களை கடந்த 62 ஆண்டுகால் சந்தித்து வருகிறோம். பலர் போராடவில்லை என்றால் திருத்தணி நம்மைவிட்டு ஆந்திரத்ற்கு செல்கிறோன். நமது எல்லைப் போராட்ட தலைவர்களையும், தியாகிகளையும் நினைவுகூற வேண்டிய நாள் இன்று.



கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய பல்வேறு போராட்டங்களில் துப்பாக்கிச் சூடும் நடந்ததுண்டு. அந்த தியாக வரலாறையெல்லாம் நாம் நினைவு கூறவேண்டும்.
1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதியில் மூன்று பேர் பலியாயினர்.
1. ஏ. தேவசகாயம், மங்காடு,
2. தி. செல்லையா, கீழ்க்குளம்,
3. கத்திக்குத்தில், பாகோடுவை சார்ந்த ஒருவரும் பலியானார்.



1950-ல் குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் வேகமெடுத்தன. இதற்கிடையில் தமிழக அமைச்சர் பக்தவச்சலமும், கொச்சி முதலமைச்சர் பாளையங்கோட்டையில் சந்தித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டபோது, குமரி மாவட்ட போராட்டக் குழுவினருக்கு அது உடன்பாடாக இல்லை. இதை எதிர்த்து 11/08/1954இல் குமரி மாவட்டத்தில் மறியல்களும், பொதுக் கூட்டங்களும் நடந்தது. அன்று காவல் துறையினர் 16 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்.
1. புதுக்கடை ஏ. அருளப்பன் நாடார்
2. கிள்ளியூர் எம். முத்துசாமி நாடார்
3.. தோட்டவாரம் எம். குமரன் நாடார்,
4. புதுக்கடை எம். செல்லப்ப பணிக்கர்,
5. தேங்காய்ப்பட்டணம் ஏ. பீர்முகமது,
6. தொடுவட்டி சி. பப்புப் பணிக்கர்,
7. நட்டாலம் எஸ். இராமையன் நாடார்,
8. மணலி, தோட்டவிளை ஏ. பொன்னப்பன் நாடார்
9. தோட்டவிளை, மணலி எம். பாலையன் நாடார்.



மேலும் இப்போராட்டத்தில் சங்கரன்நாடார் என்பவர் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்டார். வண்டி ஏற்றி ஒருவர் கொல்லப்பட்டார். பனை உச்சியிலிருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார். மொத்தம் 36 பேர் பலியானதாக தகவல்கள். பலர் கை, கால்களை இழந்தனர். குமரி மாவட்டமே அப்போது பதட்டமாக இருந்தது.



குமரி மாவட்டம் இரணியல் காவல் ஆய்வாளர் திரு. வி.எம். ஜார்ஜின் உத்தரவின் பேரில் இயங்கிய சிறப்பு தனி காவல் படை, காட்டுமிரான்டித் தனமாக நடந்து கொண்டது.
ஒரே நாளில், மாங்கரை, கொட்டேத்தி, பாலப்பள்ளம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் தெருக்களில் சென்று கொண்டிருந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது லத்தியால் அடித்தனர். திக்கணம்கோட்டை வரும்போது பள்ளியை விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவர்களிடம் அச்சத்தை உருவாக்கியது.



வடிவேல் என்ற மாணவன் சவரிமுத்து என்பவரின் வீட்டில் புகுந்து ஒளிந்துகொண்டார். போலீஸ் படை வீட்டுகுள் புகுந்துவிட்டதை கண்ட மாணவன் உயிருக்குப்பயந்து வெளியே சாடி ஓடிவிட்டான். அந்த பையன் யார் என்று சவரிமுத்துவிடம் போலீஸ் ஆய்வாளர் கேட்டார். தனக்குத் தெரியாது என்று சவரிமுத்துக் கூறியதால் தனி போலீஸ் படையினராலும், ஆய்வாளராலும் லத்தியால் அடித்து உதைக்கபட்டார் சவரிமுத்து. குறுக்கிட்ட அவன் சகோதரனும் தாயும் அதேபோன்று தாக்கப்பட்டனர். இச்செயலை கண்டித்த, திருமண வயதுக்கு வந்த, அவனது இளைய மகள் கன்னத்தில் அறையப்பட்டாள்.



அவளது காதில் கிடந்த அணிகலன் துண்டுதுண்டாக நொறுங்கியது. மூன்று பற்களும் ஆட்டம் கொடுத்தன. 10 தினங்களுக்கு முன் தனது 11-வது குழந்தையைப் பெற்றெடுத்த அவன் மனைவி இரக்கம் காட்டும்படி கெஞ்சினாள். அவள், பூட்ஸ் காலால் நெஞ்சில் உதைக்கப்பட்டாள். முடிவில், சவரிமுத்து போலீஸ்வேனில் கொண்டுசெல்லப்பட்டார். கொட்டேத்திச் சந்தையில் போலீசார் புகுந்து கலகம் விளைவித்தனர். அன்றாட பொருட்களை வாங்கவும் விற்கவும் அங்கு கூடியிருந்த 1000-க்கும் மேற்பட்ட பெண்களை துரத்தி அடித்தனர். பெண்கள் அலங்கோலமான முறையில் உயிருக்குப்பயந்து அங்குமிங்குமாக ஓடினர். இப்படியான ரணங்களும், அவலங்களும் அன்றைக்கு குமரி மண்ணில் நடந்தன.



கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டையில் சரிபாதி என நாலரைத் தாலுகாக்கள் திருவிதாங்கூர் பகுதிகளில் தமிழகத்தோடு இணைந்தன. குமரி மாவட்ட எல்லைப் போராட்டத்தில் பி.எஸ்.மணி, நேசமணி போன்றோர் செய்த தியாகங்களை எல்லாம் மறக்கமுடியாது.



விடுதலைப் போரில் போராடினோம். விடுதலை பெற்றோம். தமிழர் மண்ணை மீட்க போராடிய போது, தமிழகத்தின் குரலை மத்திய அரசு புறந்தள்ளியது. நம்முடைய நியாயங்கள் மறுக்கப்பட்டன. நம்முடைய தமிழ் மண்ணை கேரளம், கர்நாடகம், ஆந்திரத்துடன் இழந்தோம். இறுதியாக கச்சத்தீவையும் இழந்தோம். இப்படியெல்லாம் மண்ணை இழந்து 63 ஆண்டுகள் கடந்துவிட்டன


Featured Post

கிராமியக்கலைஞர் பத்திரப்பன்

கிராமியக்கலைஞர்  பத்திரப்பன்          மேட்டுப்பாளையம், தாசம்பாளையத்தில் வசிக்கும் கிராமியக் கலைஞர்  திரு.பத்திரப்பன்  (வயது 87) . இவருக்கு த...