ரோட்டரி சங்கத்தின் புதிய முயற்சி
பெருமையடையும் மேட்டுப்பாளையம்
ரோட்டரி சங்கம், மேட்டுப்பாளையத்திற்கு செய்யும் சமூக பணிகள் பல. மெட்ரோ பள்ளி, எரிவாயு மயானம், ஆட்டிசம் குழந்தைகளுக்கான பள்ளி, செயற்கை கைகள் பொருத்தும் முகாம், பேருந்து நிலைய நேர கோபுரம் என்று நீண்....டு கொண்டே இருக்கிறது இந்த பட்டியல். இப்போது மேட்டுப்பாளையத்தை தாண்டி 100 கிலோ மீட்டர் சுற்றளவிற்கும் சேவையை விரிவுபடுத்தி நமது ஊருக்கு பெருமை சேர்க்க உள்ளனர், மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தினர்.
பெண்கள் தங்கள் குடும்பத்தினர் மீது காட்டும் அக்கறையில் சிறிதளவும் கூட தங்கள் மீது காட்டுவதில்லை. பெண்களை பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும் நோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய். இந்நோயை ஆரம்ப கட்டத்திலேயே கணடறிந்து சிகிச்சை அளித்தால், எளிதாக குணப்படுத்த முடியும். ஆனால் தங்கள் நலனில் அக்கறை காட்ட இயலாத சூழலில் உள்ள பெண்கள் பெரும்பாலும் நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வருகிறார்கள். இது அவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. இதற்காக முன்கூட்டியே இந்த நோயை கண்டறியும் விதத்தில் பெண்களின் வீட்டுக்கு அருகே முகாம் நடத்தி, சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து தர திட்டமிடப்பட்டு உள்ளது. மார்பக புற்றுநோயை கண்டறியும் மேமோகிராம் என்ற இயந்திரம் பொருத்தப்பட்ட பிரத்யேக வாகனம் ஒன்று மூன்று கோடி ரூபாய் செலவில் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தினர் வாங்க உள்ளனர். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் இது தொடர்பாக கையெழுத்தாகி உள்ளது.
இது குறித்து மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் மரு.விஜயகிரி மற்றும் இந்த திட்டத்தின் தலைவர் சுரேஷ் ஆகியோரிடம் நமது மேட்டுப்பாளையம் இதழுக்காக பேசினோம்.
ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்தப் போகிறீர்கள். இதற்கான அவசியம் என்ன?
ஒரு பெண்ணின் மரணம் அந்த குடும்பத்தை வெகுவாக பாதிக்கிறது. இப்போது குடும்பத்தை நிர்வகிப்பது மட்டும் இன்றி பொருளாதார ரீதியிலும் பெண்களின் பங்கு முக்கியமாக இருக்கிறது. இப்போதைய நிலையில் மார்பக புற்றுநோய் வரும் பெண்கள் இருவரில் ஒருவர் சிகிச்சை அளிக்க முடியாமல் இறக்கும் சூழல் உள்ளது. இதை மாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு.
இந்த திட்டத்தின் பெயர் HEAL என்று வைத்து இருக்கிறோம். H என்பது HIGH AWARENESS, மக்களிடம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துதல், E என்பது EARLY DETECTION அதாவது நோயின் ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறிவது, நோய் முற்றிய நிலையில் ஒருவர் சிகிச்சை பெறும் போது ரூபாய் எட்டு லட்சம் வரை செலவிட வேண்டி உள்ளது. ஆரம்ப கட்டத்தில் நோய் கண்டறியப்பட்டால் சிகிச்சை எளிது. A என்பது AFFORTABLE TREATMENT, முகாமில் கண்டறியப்படும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் இலவசமாக செய்ய ஏற்பாடு செய்யப்படும். மேலும் L என்பது Low morbidity and Low mortality அதாவது இறப்பு சதவீதத்தையும், நோயின் பாதிப்பையும் குறைப்பது. இதுதான் HEAL திட்டத்தின் நோக்கம்.
எப்படி மார்பக புற்றுநோயை கண்டறிய முடியும்?
மேமோகிராம் என்கிற கருவி மார்பக புற்றுநோயை கண்டறிய உதவுகிறது. இந்த கருவியின் விலை சுமார் ரூபாய் ஒண்ணரை கோடிக்கும் மேல். கதிர்வீச்சு குறைவாக இருக்கும் கருவி இது. கோவையிலேயே வெறும் நான்கு அல்லது ஐந்து மருத்துவமனைகளில் மட்டுமே இந்த கருவி இருக்கிறது. இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனத்தை 100 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள பகுதிகளுக்கு கொண்டு சென்று, அங்குள்ள தன்னார்வ அமைப்புடன் இணைந்து அங்குள்ள பெண்களுக்கு சோதனை நடைபெறும்.
இந்தியா முழுவதும் ஒரு சில இடங்களில் இது போன்ற மேமோகிராம் வாகனங்கள் இயங்கினாலும், மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதோடு மட்டும் இன்றி அவர்களின் மேல் சிகிச்சையையும் தொடர்ந்து கண்காணிக்க இருக்கிறது. வேறு இடங்களில் கண்டறிதல் மட்டுமே நடக்கும்.
யாருக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்?
பத்து வயதுக்குள் பூப்பெய்திய பெண்கள், 50 வயதுக்குப் பிறகும் மெனோபாஸ் நிலையை அடையாதவர்கள், 35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பம் தரிப்பவர்கள், உடல்பருமனாக இருப்பவர்கள், பல வருடங்களாகக் கருத்தடை மாத்திரை உட்கொள்பவர்கள், குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், மெனோபாஸ் நிலையில் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், மதுப்பழக்கம் அல்லது புகைப்பழக்கம் உடையவர்கள், தாய்ப்பால் புகட்டாதவர்கள் ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்களுக்கு மட்டுமே வரும் என்றும் சொல்ல முடியாது. பெண்கள் குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பல உடலுறுப்புகளின் வளர்ச்சி பூர்த்தியாகிவிடும். ஆனால், மார்பகம் அப்படியல்ல, மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.
மார்பகத்தில் வரும் அனைத்து கட்டிகளும் புற்றுநோய் கட்டிகள் அல்ல. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சிகிச்சை செய்வது எளிது. பயம் கொள்ள தேவை இல்லை.
இந்த திட்டத்திற்கு செலவிடப்போகும் தொகை எவ்வளவு?
மேமோகிராம் கருவி மற்றும் வாகனத்துடன் ஐந்து ஆண்டுகள் இயக்குவதற்கு சுமார் மூன்று கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டு இருக்கிறோம்.
எங்கள் ஒவ்வொரு ரோட்டரி உறுப்பினரும் நிதி உதவி அளிக்கின்றனர். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்புடன் இருக்கின்றனர். தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர். கிட்டத்தட்ட 25 சதம் இலக்கை அடைந்து விட்டோம். பல்வேறு ஊர்களில் உள்ள ரோட்டரி மற்றும் இன்னர் வீல் சங்கங்களிடம் உதவி கேட்டு இருக்கிறோம். இந்த திட்டம் பற்றிய செய்தி பரவலாக பொதுமக்களிடம் சென்றால் அவர்களும் உதவுவார்கள் என்று நம்புகிறோம்.
என். சி .அரோமேட்டிக் நிறுவனம் சார்பில் இந்த திட்டத்திற்கு ரூபாய் 24 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு ஆபத்தை மார்பக புற்றுநோய் மட்டும் அல்ல, கர்ப்பவாய் புற்றுநோயும் ஏற்படுத்துகின்றன. வரும் காலத்தில் கர்ப்பவாய் புற்றுநோயையும் கண்டு பிடிக்கும் விதத்தில் இந்த வாகனத்தை செயல்படுத்தும் திட்டமும் உண்டு. அப்படி நடக்கும் போது புற்றுநோயால் இறக்கும் பெண்களின் எண்ணிகையை வெகுவாக குறைக்க முடியும். அதை நோக்கிய பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம்.
எப்போது இந்த கருவி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்?
நாம் பணம் செலுத்தி ஆறு மாதத்திற்கு பிறகு தான் இந்த இயந்திரம் கிடைக்கும். அதற்கு பின்பு அரசு சான்றிதழ் பெற வேண்டும். பிறகு வாகனத்தில் பொருத்த வேண்டும் போன்ற பணிகள் இருக்கின்றன. அடுத்த இரண்டு மாதத்திற்குள் மேமோகிராம் கருவிக்கான தொகையை செலுத்த வேண்டும் என்கிற இலக்கை மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வைத்து இருக்கிறோம்.
இந்த திட்டத்தை மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் மற்றும் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை செயல்படுத்தினாலும் இதற்கு உறுதுணையாக இருப்பவர் 3202 ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் கார்த்திகேயன் (திருப்பூர் ஏ.வி.பி கல்வி நிறுவனங்களின் தலைவர்). இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க மிகுந்த ஈடுபாடு காட்டி வரும் அவரின் பணி மிக முக்கியமானது.
நீங்களும் உதவலாம்.
இந்த உயிர்காக்கும் உன்னத முயற்சியில் உங்கள் பங்கும் இருக்கட்டும். இணைய விரும்புவோர், உங்கள் நன்கொடைகளை அனுப்பலாம். அனைத்து நன்கொடைகளுக்கும் 80G பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.
மேலும் விபரங்களுக்கு ரோட்டரி சங்க மேட்டுப்பாளையம் கிளை பொருளாளர் சீனிவாசன் அவர்களை 93622-22391 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Members of the public who wish to contribute to this noble cause can do so in one of two ways. All donations are eligible for India income tax exemption under Section 80G. After you send the amount, please contact the Rotary Club Treasurer Rtn. Srinivasan (93622-22391) to get the receipt issued. Please send only in Indian Rupees. Please do not send foreign exchange directly
Write a cheque in favour of
“METTUPALAYAM ROTARY CLUB TRUST”
and send to the following address:
Mobile Mammogram Unit Project Office
C/O Ramesh & Co
235, Ooty Main Road
Mettupalayam – 641301
NEFT/RTGS/IMPS to the following account:
Account Number: 520101015643197
Account Name : Mettupalayam Rotary ClubTrust
Bank: Corporation Bank
Branch: Mettupalayam
IFSC Code: CORP0000016