தரமற்ற பாதாள சாக்கடைப்பணிகள்
குடிநீர் வடிகால் வாரியம் அலட்சியம்
மேட்டுப்பாளையம் நகர மக்களின் நீண்டகால கோரிக்கையான பாதாள சாக்கடைத் திட்டத்தின் துவக்கவிழா கடந்த 2018 ஜூன் மாதம் 19ம் தேதி நடைபெற்றது. நகரின் ஒட்டுமொத்த கழிவுகளாலும் சுற்றுவட்டார கிராமங்கள், தொழிற்சாலைகளின் கழிவுகளாலும் மாசடைந்து கொண்டிருக்கும் பவானி நதியைப் பாதுகாக்க பலராலும் வெகுகாலமாக வலியுறுத்தப்பட்ட திட்டம் இது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதார மேம்பாடு, நீர் மாசுபாட்டால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
நோக்கம்
மேட்டுப்பாளையம் சாந்திநகர் பகுதியில் துவங்கி நகரின் முப்பத்தி மூன்று வார்டுகள் மற்றும் அருகிலுள்ள ஊராட்சி பகுதிகளிலிருந்து வரும் திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்களையும் புதிதாக அமையும் பாதாள சாக்கடைக் குழாய்களுடன் இணைத்து, சிறுமுகை ரோடு வெள்ளிப்பாளையம் குப்பைக்கிடங்கு அருகில் அமையவுள்ள கழிவுநீர் சேகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து விவசாயத் தேவைகளுக்காக வழங்குவதே திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூபாய் 91.7கோடி ஆகும்.
இந்த திட்டம் துவக்கப்பட்ட போது பேசிய அமைச்சர் வேலுமணி அவர்கள், "நகர்பகுதி முழுவதும் சுமார் எண்பது கிலோமீட்டர் நீளத்துக்கு புதிதாக கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படும். ஆறு இடங்களில் கழிவுநீர் உந்து நிலையங்களும், எட்டு இடங்களில் நீர்மேலேற்று நிலையங்களும் உருவாக்கப்படும். முப்பது மாதங்களுக்குள் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.
குழாய்களின் தரம்
இப்போது பணிகள் துவங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. பாதாள சாக்கடை திட்டத்திற்காக பதிக்கப்படும் குழாய்கள் பல வருடங்கள் சேதம் ஆகாத அளவில் தரமாக இருக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் பார்த்த போது விரிசல் விழுந்த குழாய்களை பதிப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. பதிக்கப்படும் குழாய்களுக்கு மேல் வாகனங்கள் செல்லும் போது குழாய் உடைவதற்கான வாய்ப்பும் உண்டு. இது போன்ற பணிகளில் பயன்படுத்தும் குழாய்களை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு நடைபெற்றதா என்று தெரியவில்லை.
ஆய்வு குழி
குறிப்பிட்ட அடிகள் இடைவெளியில் ஆய்வுக் குழிகள் (INSPECTION CHAMBER) அமைக்கப்படுகிறது. பொதுவாக இவை வாகனங்கள் செல்லும் சாலைகளில் கான்க்ரீட் மூலம் அமைக்கப்பட்டால் தான் வாகனங்கள் செல்லும் போது இடிந்து விழாமல் இருக்கும். ஆனால் பல இடங்களில் செங்கல்கள் மூலமே அமைக்கப்படுகிறது. இது எப்படி நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இருக்கும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்த குழிகள் மீது சாலைகள் அமைக்கப்பட்ட பின்பு வாகனங்கள் செல்லும் போது குழிக்குள் விழுந்து விடும் ஆபத்து ஏற்பட்டு விடும்.
கான்க்ரீட் ஆய்வு குழிகளுக்கும் குறிப்பட்ட நாட்களுக்கு நீர் விட்டால் மட்டுமே கட்டிடம் நல்ல நிலையில் இருக்கும். ஆனால் தண்ணீர் விடுவதே இல்லை. இதனால் கான்கிரீட் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது.
உடைக்கப்படும் குடிநீர் குழாய்கள்
பாதாள சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டப்படும் போது சில இடங்களில் குடிநீர் குழாய்களை உடைத்து விடுகின்றனர். இதை இவர்கள சரி செய்வதும் இல்லை, இது குறித்து போதுமான தகவல்களையும் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிப்பது இல்லை. எனவே குடிநீர் வரவில்லை என்றும் போராடும் மக்களை சமாளிக்க சிரமப்படுகின்றனர் நகராட்சி பணியாளர்கள். அதே போன்று வீட்டு இணைப்புகளையும் துண்டித்து விட்டு சென்று விடுகின்றனர். பிறகு அந்த வீட்டுகாரரே சரி செய்யும் நிலையும் இருக்கிறது.
விபத்தை ஏற்படுத்தும் குழிகள்
சாலையின் நடுவே குழி தோண்டி விட்டு போதிய பாதுகாப்பு இன்றி விட்டு விடுகின்றனர் பாதாள சாக்கடை பணியாளர்கள். சாலையின் துவக்கத்தில் அறிவிப்பு பலகையும் வைப்பது இல்லை. இரவு நேரத்தில் வருவோர் விபத்துக்கு உள்ளாகும் நிலை இதனால் ஏற்படுகிறது.
கண்காணிக்காத நிர்வாக பொறியாளர்
பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் குறைபாடு இருந்து விட்டால் தினம் தோறும் மக்கள் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு விடும். மழை காலங்களில் கழிவு நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நிலையும் ஏற்பட்டு விடும். எனவே இந்த பணிகள் முறையாக தொடர் ஆய்வு செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வுப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக பொறியாளர் செய்யவேண்டும். ஆனால் இவர் பாதாள சாக்கடைப் பணிகளை முறையாக கண்காணிக்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. 92 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் திட்டத்தை போதிய ஆய்வு செய்யாத நிர்வாக பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் அவரின் நினைவாக எந்த குறையும் இன்றி செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு பயன்படும் விதத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள மக்கள். செயல்படுத்துவார்களா அதிகாரிகள்?
(யார் இந்த ஒப்பந்ததாரர்?
சில வருடங்களுக்கு முன்பு 24 மணி நேரமும் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்க திட்டம் தீட்டப்பட்டு நகராட்சி பகுதி முழுவதும் குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டது நமக்கு நினைவு இருக்கும். ஆனால் இந்த திட்டம் முடிந்த பிறகும் இன்னும் அதன் நோக்கம் நிறைவேறவில்லை. 24*7 என்கிற எப்பொழுதும் குடிநீர் வழங்கும் திட்ட பணிகளை செய்த ஒப்பந்ததாரர் தான் பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் செய்கிறார் என்கிறார்கள்.)
இது தொடர்பாக மக்களின் கருத்தை கேட்டோம். அவர்களின் கருத்து இனி...
முறையாக கண்காணிக்க வேண்டும்
சத்தியவதி கணேஷ், முன்னாள் நகரமன்ற தலைவர்
பாதாள சாக்கடைப் பணிகள் பல வருடங்கள் மக்கள் பயன்படுத்தும் வகையில் தரமாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி தரமாக பணிகள் நடைபெறாதது வேதனை அளிக்கிறது. இந்த திட்டத்தை கண்காணிக்க உள்ளூர் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டும் ஏற்கப்படவில்லை. கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் முறையாக கண்காணிக்காததால் வரும் காலத்தில் தினம் தினம் மக்கள் அவதிக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.
பணிகளுக்காக தோண்டப்படும் குழிகள் குறித்து சரியாக அறிவிப்பு இல்லாததால் விபத்து நடைபெறுகிறது. பணிகள் முடிந்தாலும் சரியாக மூடப்படுவதில்லை. தற்காலிக நிவாரணமாக கூட சாலை சரி செய்யபடுவது இல்லை. மண் புழுதியோடு சாலையில் செல்ல வேண்டி உள்ளது. குடிநீர் குழாய்களை துண்டித்து விட்டு அப்படியே சென்று விடுகின்றனர். 92 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இந்த திட்டத்தை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும்.
கண்காணிப்பு குழுவை உருவாக்க வேண்டும்
முருகவேல், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்
மேட்டுப்பாளையம் நகரில் பாதாளச் சாக்கடை தொட்டிக்கு தோண்டும் மண்ணை அகற்றாததால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், தோண்டும் பள்ளங்களில் எச்சரிக்கை போர்டு வைக்காததால், பொதுமக்களும் வாகன வாகன ஓட்டிகளும் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும், குடிநீர் குழாய்கள் அமைந்துள்ள பல பகுதிகளில் பாதாளச் சாக்கடை தொட்டிகளை அமைப்பதாக கூறி குழி தோண்டப்படுகிறது. இதனால், குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்காக குழி தோண்டும் போது உடையும் குடிநீர் குழாய்களை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரே மாற்றித் தர வேண்டும்
பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாளச் சாக்கடை திட்ட பணியை கண்காணிக்க அந்தந்த பகுதியில் கண்காணிப்பு குழுவை உருவாக்க வேண்டும்.
92 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் திட்டத்தை போதிய ஆய்வு செய்யாத நிர்வாக பொறியாளர் மீது நடவடிக்கை எடுத்து, இந்த திட்டத்தை கண்காணிக்க வேறு நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும்.
மந்தமான பணிகள்
எம்..சுரேஷ், சமூக செயற்பாட்டாளர்
பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் துவங்கியதில் இருந்தே மந்தமாக உள்ளது. பல இடங்களில் பணிகளை சரிவர முடிக்காமல் குழிகளை மட்டும் தோண்டி வைத்து விட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் உள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில் உள்ள குழிகளால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
மேலும் பல கோடி ரூபாய் செலவில் துவங்கிய பாதாள சாக்கடை திட்டத்தின் பணிகளில் தரமில்லா நிலை உள்ளதாக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளனர். பல இடங்களில் குழிகளை தோண்டும் போது குடிநீர் குழாய் சேதமடைகிறது. அதை உடனே சரி செய்தால் குடிநீர் வீணாவதை தவிர்க்கலாம்.