“ரெயின்போ” வெங்கட்ராமன் அவர்களுடன் நேர்காணல்

 



                                      கல்வியாளர் திரு.வெங்கட்ராமன்அவர்கள் நேற்று (25.08.2019)இரவு 11.20 மணி அளவில் நம்மிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றார். ஆயிரக்கணக்கான நல்ல மாணவர்களை உருவாக்கியவர் அவர். படிக்கிற மாணவர்கள் எங்கும் படிப்பார்கள். ஆனால் பள்ளிகளில் இடை நின்ற பல மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க காரணமாக இருந்தவர் அவர். அவரை கல்வியாளர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. நகரின் அனைத்து சமூக நல பணிகளிலும் அவரின் பங்கு இருந்தது.  அவரின் மரணம் நமக்கு மிகப்பெரிய இழப்பு.


டந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் அவரின் நேர்காணல் நமது மேட்டுப்பாளையம் மாத இதழில் வெளியானது. அவரின் நினைவாக அந்த நேர்காணல் கீழே.


 


ரெயின்போ கல்வி நிறுவனத்தின் முதல்வர், சிறந்த கல்வியாளர், மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர், சிறந்த பேச்சாளர், சமூக ஆர்வலர் என பல பரிமாணங்களுக்கு சொந்தக்காரரான ரெயின்போ திரு. வெங்கட்ராமன் அவர்களுடன் இந்த மாத நேர்காணல்.   


மேட்டுப்பாளையத்திற்கு உங்கள் வருகை எப்படி ? எப்போது ?   


எனது சொந்த ஊர் தஞ்சாவூர் அருகில் உள்ள திருவையாறு. நான் திருச்சி தேசிய கல்லூரியில் பி.காம் படித்து முடித்த சமயத்தில், மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணிக்கான விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்தேன். எனக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. இருப்பினும் அன்று இருந்த பள்ளி தாளாளருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அந்த வேலையிலிருந்து விலகி ரெயின்போ கல்வி நிறுவனத்தை தொடங்கினேன். இதன் வளர்ச்சிக்கு அப்போது எல்லோரும் உதவிசெய்தனர். இக்கல்வி நிறுவனம் சிறப்பாக செயல்பட மாணவர்கள் முக்கிய காரணம். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது கூட, என்னிடம் பயின்ற மாணவர்கள் எனக்காக மருத்துவ செலவினை ஏற்க தயாராயிருந்தனர். மேட்டுப்பாளையம் என்னை வாழவைத்த ஊர் ஆகும்.


ரெயின்போ கல்வி நிறுவனம் பற்றி கூறுங்களேன் ?.           


அசுர உழைப்பு உழைத்தேன் என்று  சொல்லலாம். காலை ஐந்து மணிக்கு வகுப்பு எடுக்க துவங்கினால், இரவு பதினோரு மணி வரை வகுப்புகள் நீளும். ரெயின்போ கல்வி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று பயன் பெற்றுள்ளனர். இன்றைக்கு அந்த மாணவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாவிட்டாலும் நன்றாக இருப்பார்கள்.


மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் சாதனைகள் ?     


1988ஆம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறேன். இன்றைக்கும் உள்ள நுகர்வோர் சங்க உறுப்பினர்கள் என்னையே தொடர்ந்து தலைவராக இருக்க சொல்கின்றனர். கோவையில் முதன்முதலில் நுகர்வோர் நீதிமன்றம் அமைக்கப்பட்ட பின்னர் முதல் வழக்கே, மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்காகும். சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கும் வசதிக்கான கட்டணம் 500 கி.மீ ரூபாய் 20ம், 500 கி.மீ. குறைவாக இருந்தால் ரூபாய் 15 வாங்க வேண்டும். மாறாக மேட்டுப்பாளையத்தில் டிக்கெட் புக் செய்தால் ரூபாய் 20 கட்டணமாக வாங்குவார்கள். நாங்கள் இதை ரூபாய் 15 தான் வசூல் செய்யவேண்டும், ஏனென்றால் சேரன் எக்ஸ்பிரஸ் கோவையிலிருந்து சென்னைக்கு செல்கிறது. இது 500 கி.மீ. தூரத்திற்கு குறைவானது, எனவே அதிக கட்டணம் வாங்க கூடாது என்று ரயில்வே ஜெனரல் மேனேஜர் அவர்களுக்கு 13 கடிதங்கள் அனுப்பியிருந்தோம். அதையெல்லாம் நீதிமன்றத்தில் கூறி முதல் வழக்கில் வெற்றி பெற்றோம்.


அடுத்து போக்குவரத்து துறையில் 1990-1991ஆண்டுகளில்  10 பைசாவை குறைக்க வழக்கு நடத்தியிருக்கிறோம்.  1998ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் கோவைக்கு 37 கி.மீட்டருக்கு கட்டணம் நிர்ணயம் செய்திருந்தனர். ஆனால் நெடுஞ்சாலை துறை மேட்டுப்பாளையம் - கோவை 35 கி.மீ. என பலகை வைத்திருந்தனர். இதையே நாங்கள் நீதிமன்றத்தில் கூறினோம். ஆனால் போக்குவரத்து துறை 36 கி.மீட்டருக்கு கட்டணம் வாங்குவதாக கூறினார்கள். இதுவே எங்களது வெற்றியாகும். இருந்த போதும் போக்குவரத்து துறை சாய்பாபா காலனி வழியாக செல்லாமல் வடகோவை மேம்பாலம் வழியாக செல்வதாக கூறி வழக்கில் வெற்றி பெற்றனர். நாங்கள் இந்த வழக்கில் தோல்வியடைந்தோம்.  


மேட்டுப்பாளையத்தில் இருந்து வடகோவை பேருந்து நிலையம் செல்வதற்கும், காந்திபுரம் செல்வதற்கும் ஒரே பேருந்து கட்டணமே வசூலித்து வந்தார்கள். எங்கள் நுகர்வோர் இயக்கம் மூலம் எடுக்கப்பட்ட முயற்சிகள் மூலம் வடகோவை பேருந்து நிலையம் செல்வதற்கான கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அடுத்ததாக மாவட்ட ஆட்சியராக திரு. சங்கர் அவர்கள்  இருந்தபோது போலி ரேஷன்  கார்டுகளை பிடிக்க எங்களது நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்துக்கு அனுமதி தந்தார். இது அரசு எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவிலேயே போலி ரேஷன் கார்டுகளை பிடிக்க அனுமதி பெற்ற  சங்கம் எங்களுடையது மட்டுமே.


மேலும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்  பள்ளி கல்லூரிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் குஞ்சப்பனை கிராம பகுதி மக்களிடமும் நடத்தியிருக்கிறோம். இப்போது வரை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டங்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை களைவதற்கு உதவியாக வருகிறோம்.


மேட்டுப்பாளையத்தின் பொதுவான சமூக நல அமைப்புகளில் உங்களின் பங்களிப்பு பற்றி...?


அறிவியல் இயக்கத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். பவானி ஆறு மாசுபடுதலுக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். மேட்டுப்பாளையம் கோவை பாசஞ்சர் ரயிலை அதிக முறையில் இயக்கக்கோரி 2009-2010ஆம் ஆண்டு திரு.மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்த போது நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பினோம். டெமோ ரயில் இயக்குவதாக எங்களுக்கு பதில் கடிதம் வந்தது. பிறகு டி.டி.ஆர் அவர்களின் மக்கள் நல பேரவையின் சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். ரயில் மறியல் போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளேன். இன்றைக்கு பயணிகள் ரயில் அதிக முறை இயங்குவதற்கு எங்களது நுகர்வோர் பாதுகாப்பு இயக்கமும் ஒரு காரணம். எனக்கு அரிமா சங்கம் சார்பில் சமூக ஆர்வலர் என்ற விருதையும் பெற்றிருக்கிறேன்.


பவானி நதிநீர் மாசுப்படுவது குறித்து நமது  பகுதி மக்களுக்கு உள்ள புரிதலும் செயல்பாடுகளும் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?


பொது மக்களிடம் இன்னும் சரியான புரிதல் இல்லை என்றே நினைக்கிறேன். சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் இந்த விசயத்தை ஆழமாக நல்ல முறையில் மக்களுக்கு சொல்ல வேண்டும். இதன் மூலம் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும். அதேநேரத்தில் பவானி நதிநீர் இயக்கங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். நான் பவானி நதியை காப்பதற்காக எந்த கூட்டம் நடந்தாலும் கலந்து கொள்கிறேன். சமீபத்தில் கூட மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கலந்து கொண்டு பவானி நதிநீர் மாசுபாடு குறித்து பேசியிருக்கிறேன்.


கடந்த ஐம்பதாண்டு காலத்தில் மேட்டுப்பாளையத்தின் வளர்ச்சி பற்றி கூறுங்கள் ?  


1967ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் நமது ஊர் வளர்ந்திருக்கிறது. ஆனால் இன்றைய மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் பெரிய அளவில் வளரவில்லை என்றே கூறலாம். இன்றைய இளைஞர்கள் இதை கணக்கிலெடுத்து நமது ஊர் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும்.


உங்களுடைய மாணவர்களுக்கு நீங்கள் சொல்வது என்ன ?


என்னுடைய மாணவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் இந்த ஊரின் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும். பல்வேறு சமூக நல அமைப்புகளில் இணைந்து மேட்டுப்பாளையம் முன்னேற்றம் அடைவதற்கு உதவ வேண்டும்.     


உங்களுடைய ஆசிரியர் பணியைப்பற்றி கூறுங்கள் ? 


1967 காலகட்டத்தில் வருமானம் குறைவாக இருந்தாலும் ஆசிரியர் பணியை நான் விரும்பி தேர்ந்து எடுத்தேன். எனக்கு அப்போது ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல வேலைகள் கிடைத்தபோதும், அதை விடுத்து 192 ரூபாய் சம்பளமுள்ள ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்தேன். இதனால் பணம் சம்பாதிக்க முடியாவிட்டாலும், ஆயிரக்கணக்கான மாணவர்களின் அன்பை பெற்றுள்ளேன். இப்போது எனது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை எடுத்து வருகிறேன். எனது மருத்துவ செலவுகளை முகம் தெரியாத மாணவர்கள் ஏற்க தயாராக உள்ளனர் என்பது எனக்கு பெருமையே. எனது கடைசி நிமிடம் வரை ஆசிரியர் தொழிலைச் செய்யவேண்டும் என்பதே எனது ஆசை.


Featured Post

கிராமியக்கலைஞர் பத்திரப்பன்

கிராமியக்கலைஞர்  பத்திரப்பன்          மேட்டுப்பாளையம், தாசம்பாளையத்தில் வசிக்கும் கிராமியக் கலைஞர்  திரு.பத்திரப்பன்  (வயது 87) . இவருக்கு த...