மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரக் கோவில்கள்

 



 


வனபத்ரகாளியம்மன் கோவில்.


தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம்.


பொதுவாக பத்ரகாளி என்றாலே வாள், வேல், சூலம், மண்டை ஓடுகள் தாங்கிய ஆக்ரோசமான கோலத்திலான காளி வடிவம்தான் அனைவருக்கும் நினைவில் வரும். ஆனால் நம்முடைய மேட்டுப்பாளையம் பகுதியில் தேக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள அம்மன் சாந்த சொரூபியாக, அமைதியே உருவாகத் தேடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தருபவளாகக் காட்சி தருகிறாள் அன்னை.


சிறப்பு
புராண காலத்தில் பகாசுரன் என்னும் அரக்கனுக்கும் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமனுக்கும் இடையே இப்பகுதியில் போர் நடைபெற்றதாகவும்  அம்மன் அருளால் அப்போரில்  பீமன் வெற்றி பெற்றதாகவும். தன் அகங்காரம் ஒடுங்கிய நிலையில் பகாசுரன் அம்மனிடம் வேண்டி காவல் தெய்வமாக  இக்கோவில் வளாகத்திலேயே இருப்பதாகவும் நம்பப்படுகிறது. பகாசுரனுக்கும் பீமனுக்கும் இங்கே பிரம்மாண்டமான   சிலைகள் உள்ளன. மேலும் ஆரவல்லி சூரவல்லி வீரவல்லி ஆகியோருடைய ஆட்சியில் இருந்த நெல்லிமலை பட்டணம்  இந்த பகுதி தான் என்று  இவ்வட்டார  மக்களால் நம்பப்படுகிறது.


திருவிழாக்கள்
ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் முதல் செவ்வாய் பூச்சாட்டி இரண்டாம் செவ்வாய் குண்டம் அமைத்து தீமிதிக்கும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. நல்ல காரியங்கள் செய்ய அம்மனின் சம்மதம் வேண்டி பூ கேட்கும் நிகழ்வு இங்கே சிறப்பு. மேலும் வருடம் முழுவதும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் "கிடா வெட்டுதல்" என்ற நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வுகளும் பக்தர்களால் விமரிசையாக நடத்தப்படுகிறது.


அமைவிடம் 


மேட்டுப்பாளையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தேக்கம்பட்டி கிராமத்தில் பவானி ஆற்றங்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.
நேரம்
காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.


 


அருள்மிகு ஜெயமங்கள ஆஞ்சநேயர் - அனுமந்தராய சுவாமி திருக்கோவில், 


இடுகம்பாளையம்.
கிபி 13ம் நூற்றாண்டில்  உருவானதாக வரலாறுள்ள இக்கோவிலில் ஆஞ்சநேயர், ராமலிங்கேஸ்வரர்,  பர்வதவர்த்தினி,  விநாயகர் திருத்தலங்களை கொண்டுள்ளனர். சுமார் எட்டு அடி உயரத்தில் சுயம்பாக எழுந்துள்ள பாறையில் ஆறு அடி உயரமுள்ள கம்பீரமான, நேர் கொண்ட பார்வையுடன் வித்தியாசமாக காட்சி அளிக்கிறார் ஆஞ்சநேயர். அதே சுயம்பு பாறையின் பின்புறம் அலங்கார நந்தியின் சிலை செதுக்கப்பட்டுள்ளது.  இது போன்ற அமைப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காததாகும். இயற்கையாகவே பூமியில் இருந்து பொங்கி எழும் ஏழு புனித தீர்த்தங்கள் இந்த கோயிலை சுற்றிலும் இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் சனிக்கிழமை பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.
பக்தர்கள் பங்களிப்பில் மிகச் சிறப்பான அன்னதானமும் அந்நாட்களில் நடைபெறுகிறது. 
நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்:
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையின் வலது புறம் இடுகம்பாளையம் என்ற கிராமத்தில் அருள்மிகு ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 


 


தென் திருப்பதி  ஸ்ரீ வெங்கடேஷ்வர சுவாமி திருக்கோவில், 


ஜடையம்பாளையம்.
திருமலைவாசன் எம்பெருமான் வெங்கடேசனின் அருள் வாசம் வீசும் விதமாக  நமது நகரை ஒட்டியுள்ள ஜடையம்பாளையம் கிராமப்பகுதியில், தனியார் நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது  இத்திருக்கோவில். கோவிலில் வெங்கடேஸ்வர சுவாமி, கருடாழ்வார், வரதராஜ சுவாமி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். சுதர்சன ஆழ்வார், யோகநரசிம்மர்  ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் மற்றும் வேதாந்த தேசிகர்   சன்னதிகளும் உள்ளன. திருப்பதி கோவிலில் நடைபெறும் அனைத்து விசேஷங்களும் இங்கும் சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது. புரட்டாசி மாதங்களிலும் இன்னபிற விசேஷ நாட்களிலும் பக்தர்கள் பெருந்திரளாக வருகின்றனர். அன்னதானமும் வழங்கப்படுகிறது.
இடம்:
மேட்டுப்பாளையம் -அன்னூர் நால்ரோடு பகுதியின் இடது புற சாலையில் இரண்டு கி.மீ தூரத்தில் இத்தலம் உள்ளது.
நேரம் :
காலை 5.30 மணி முதல் பகல் 12.30 வரை
மாலை 4 மணி முதல் இரவு 7.30 வரை.


 


குழந்தை வேலாயுத சுவாமி கோவில்.


குருந்தமலை . 


அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியைப் போலவே மேற்கு நோக்கிய மூலஸ்தானம் அமையப் பெற்ற கோவில். குரு இருந்த மலை என்பது மருவி குருந்தமலை ஆகி இருக்கலாம் என ஒரு கருத்தும், இப்பகுதி குருந்த மரங்கள் நிறைந்திருந்த காரணத்தால் இப்பெயர் வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.  108 படிகளைக் கொண்ட அழகிய மலைமேல் அமைந்துள்ளது இக்கோவில் . பஞ்சாட்சர கணபதி, பஞ்சலிங்கம், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக கட வுள் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். குருந்தமலையில் ஆறுமுகசுனை எனப்படும் எனப்படும் தீர்த்தம் உள்ளது.


மலைக்கோவிலுக்கு எதிர்புறம் அனுமந்த சுனை எனப்படும் தீர்த்தமும் உள்ளது அதன் அருகிலே ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள  பாறையில் அனுமனின் பாதம் பதிந்துஉள்ளதாக  நம்பப்படுகிறது. சுமார் 800 வருடங்கள் பழமையான கோவிலாகும். அகத்திய மாமுனிவரும், அருந்தவரும், ஆதவனும் பூஜித்த தலமாகும். குருந்தமலை திருப்புகழ், குறுந்தொகை பதிற்றுப்பத்து அந்தாதி, குருந்தமலை ஸ்ரீ ஆஞ்சநேயர் பதிகம்,  குழந்தை வேலாயுத சுவாமி பிள்ளைத்தமிழ்,  ஸ்ரீ கம்பீர விநாயகர் விநாயகர் பதிகம் என பல ஆன்மீக அன்பர்களால் பாடப்பட்ட  தலம் என்பது பெருமைக்குரியது. ஆண்டுதோறும் தைப்பூசத் தேர் திருவிழாவானது 11 நாட்கள் பிரம்மோற்சவமாக நடைபெறுகிறது. சூரசம்ஹாரம், பங்குனி உத்திர திருவிழா  மற்றும் மாதாந்திர சஷ்டி, கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. 
சிறப்பு 
வருடந்தோறும் மார்ச் மாதம் 22ஆம் தேதி மாலை நேரத்தில் சூரிய ஒளியானது மூலஸ்தானத்தில் உள்ள முருகனின் திரு உருவத்தின்  மேல்  பாதம் முதல் மார்பு வரை படர்வது சிறப்புமிக்கதாகும். 


அமைவிடம் 


மேட்டுப்பாளையத்திலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் , பேருந்து வசதிகள் உள்ளது.


நேரம் 
காலை 7 மணி முதல் மதியம் 1 மணி மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை.


 


அரங்கநாதசுவாமி திருக்கோயில், 


காரமடை.


அக்காலத்தில் காரை மரங்கள் நிறைந்த வனத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த  அரங்கநாதருக்கு பிற்காலத்தில் பிரம்மாண்டமான கோயில் கோயில் கட்டப்பட்டுள்ளது.  ஆஞ்சநேயர், ருக்மணி சத்யபாமாவுடன் வேணுகோபாலன், நம்மாழ்வார் ராமானுஜர், மணவாளமாமுனிகள், சந்தான கிருஷ்ணர், பரவாசுதேவர், நாகர்  மற்றும் ராமர் சன்னதிகள் இங்கு உள்ளது.
தேர்த் திருவிழா
மாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். அன்பர்கள் தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை தேங்காய் ஆகிய  பொருட்களைக் கொண்டு கவாள சேவை அளிக்கின்றனர். பக்தர்கள் தோள்களில் பந்தம் ஏந்தியபடி  பந்த சேவை நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். புரட்டாசி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் மிகச் சிறப்பான பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. மாசி மாதம் பிரம்மோற்சவம், ராமானுஜர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி மற்றும் நவராத்திரி திருவிழாக்கள் களை கட்டுகின்றன. காரமடை அருகிலுள்ள பெட்டத்தம்மன் மலையில் ரங்கநாயகி தாயார் எழுந்தருளியுள்ளார்.
அமைவிடம் 
மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் காரமடை பகுதியில் உள்ளது.
நேரம் 
காலை 5.30 மணி முதல் மதியம் 1மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.


 


கல்யாண சுப்ரமணியர் கோவில்


குமரன் குன்று.
மிக ஏகாந்தமான பகுதியில் உள்ளது இக்கோவில். கருவறையில் வள்ளி தெய்வானையுடன் மணக்கோலத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.
வைத்தீஸ்வரர், தையல்நாயகி சன்னதிகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன.  மகா கணபதி, நவக்கிரகம், வீரபாகு, இடும்பன் கடம்பன், அருணகிரிநாதர், ஆஞ்சநேயர் சன்னதியும் இங்கு உள்ளது. சனி தோசம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இந்த ஆஞ்சநேயரை 48 முறை வலம் வந்து வேண்டினால் சனியின் தாக்கம் குறையும் என்று மக்கள் நம்புகின்றனர். தமிழ் வருடப்பிறப்பான சித்திரை முதல் நாள் காலை நேரத்தில் சூரிய ஒளி முருகன் திருமேனி மீது விழுவது மிகச் சிறப்பாகும். கிருத்திகை, சஷ்டி தினங்களில் சிறப்பு வழிபாடுகளும், தைப்பூசத் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.  திருமண தடை நீங்க பிரார்த்திக்கும் பக்தர்கள் பலரும் இத்தலத்திலேயே தங்கள் திருமண விழாக்களை நடத்துகின்றனர். 
அமைவிடம் 
மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 


நேரம் 
காலை 5 மணி முதல் மதியம் 1மணி வரை,
மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை.


குட்டையூர் மாதேஸ்வரன் கோவில்.
குட்டையூர். 
நமது நகரில் அமைந்துள்ள சைவத் திருத்தலங்களில் மிக முக்கியமான தலம் இதுவாகும். திருவண்ணாமலையில் உள்ளது போலவே இங்கும் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்  வருகின்றனர்.  பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது.  மன அமைதி வேண்டுவோர்க்கு உகந்த சூழல் நிறைந்த இடமாக விளங்குகிறது. சாலை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோடு வழியாகவும், காரமடை ரோடு குட்டையூர் வழியாகவும் சென்று வரமுடியும். 


சாய் பாபா கோவில், 


குட்டையூர்.
குட்டையூர் மாதேஸ்வரன் கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ளது இக்கோவில். மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சீரடி சாய் பக்தர்களால் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. வியாழக்கிழமைகளில் சிறப்பு ஆரத்திகள், சுவாமி உலா உள்ளிட்ட நிகழ்வுகளும் அன்னதானமும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. அமைதியான சூழலில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் ஒவ்வொரு அங்குலமும் ரசிக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான வாகன நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.


மாதேஸ்வரன் கோவில்,  சத்தியமூர்த்தி நகர், 
பத்ரகாளிஅம்மன் கோவில் ரோடு, மேட்டுப்பாளையம்.


நமது நகரில் பவானி ஆற்றங்கரையை ஒட்டிய சிறிய குன்றின் மேல் சிறப்பான தோற்றத்தில் அமைந்துள்ளது.  காசி விஸ்வநாதர்,  விசாலட்சி தாயார்  சன்னதிகள்,  விநாயகர், ஆதிபராசக்தி, பஞ்சலிங்கம், முருகன், துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன. சனீஸ்வரருக்கு தனி திருமேனி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெறுகின்றது. காலபைரவ அஷ்டமி நாட்களில் கூட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா சமயத்தில் சுவாமி திருவீதி உலா வருகிறார். அந்நாளில் மிகச் சிறப்பான முறையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சிவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபம் அன்று சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்வு சிறப்பு.  முன்னோர்களுக்கு  கர்ம காரியங்கள் செய்யும் நந்தவனம், பவானி ஆற்றங்கரை அருகிலேயே மயானமும், மலைமீது சிவன் கோவில் என காசியில் உள்ளது போன்ற சிறப்பான அமைப்பு இங்கு காணப்படுகிறது.


 


கன்னிமார் கோவில்


 ஊட்டி ரோடு.
மேட்டுப்பாளையம் உதகை சாலையில் பிளாக்தண்டர் பொழுதுபோக்கு பூங்கா எதிரில் இக்கோவில் உள்ளது. இங்கு சப்த கன்னிமார், கருப்பசாமி, கல்கத்தா காளி சன்னதிகள் உள்ளன. ஆடி மாதம் திருவிழா நடைபெறுகிறது. எல்லா விசேஷ நாட்களிலும் அபிஷேக அலங்கார பூஜைகளும், அன்னதானமும் நடைபெறுகிறது.


சீனிவாசப் பெருமாள் கோவில்,


தாசம்பாளையம்.
நகருக்கு அருகிலுள்ள தாசம்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அழகிய திருக்கோவில். சீனிவாச பெருமாள் தனி சன்னதியும்,  ஆழ்வார்கள் -ஆண்டாள் சன்னதிகளும், ஆஞ்சநேயர் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. எல்லா விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் சுவாமி திருவீதி உலா,  ராம நாம சங்கீர்த்தன பஜனைகள் மற்றும் அலங்கார பூஜை, தொடர் அன்னதானம் நடைபெறுகிறது. வாகன நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.


சுப்ரமணியசுவாமி திருக்கோவில்,
முருகானந்தன் வீதி காந்தி, மைதானம். 


மேட்டுப்பாளையத்தில் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. முன்பு இங்கு ஒரு பெரிய மண்டபம் இருந்தது. ஊரின் முக்கிய நிகழ்ச்சிகள், திருமணங்கள் இங்கே நடைபெற்றன. தற்சமயம் கோவில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சஷ்டி, கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விசேஷங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோவிலில் சுரங்கப்பாதை - குகை இருப்பதாக பலராலும் சொல்லப்பட்டு வந்தது, சில வருடங்களுக்கு முன்பு கோவில் திருப்பணிகள் செய்யும் பொழுது  சுரங்கப்பாதை இருப்பது உறுதி செய்யப்பட்டது. 


ஸ்ரீசக்தி விநாயகர் கோவில்,
பேருந்து நிலையம் அருகில், மேட்டுப்பாளையம்.



நகரின் மத்தியில் அமைந்துள்ள இக்கோவிலில் விநாயகர், குரு தட்சிணாமூர்த்தி பகவான், வெள்ளிங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயார், முருகன், துர்க்கை, நவகிரக சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா, பங்குனி உத்திர திருவிழா, சித்திரை தமிழ்புத்தாண்டு, அமாவாசை, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.


 


ஸ்ரீஐயப்ப சுவாமி திருக்கோவில்,


சிவன்புரம், மேட்டுப்பாளையம்.


மேட்டுப்பாளையம்-காரமடை ரோட்டில் இக்கோவில் அமைந்துள்ளது.  சுமார் 30 வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட இக்கோவிலில்  ஸ்ரீ ஐயப்பன், பகவதி, முருகன், கணபதி, நவகிரகங்கள் உள்ளனர்.  மகாவிஷ்ணு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது கோவிலின் தனிச்சிறப்பாகும். கேரள முறைப்படி அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில் பெருந்திருவிழா  நடைபெறுகிறது. 
நேரம் 
காலை 6 மணி முதல் 10.30 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 8.30.


Featured Post

கிராமியக்கலைஞர் பத்திரப்பன்

கிராமியக்கலைஞர்  பத்திரப்பன்          மேட்டுப்பாளையம், தாசம்பாளையத்தில் வசிக்கும் கிராமியக் கலைஞர்  திரு.பத்திரப்பன்  (வயது 87) . இவருக்கு த...