ஒரு நண்பருடன் பேசிகொண்டிருந்த சமயம். 20 வருடங்களுக்கு முன்பு, மத்திய ஆட்சி பணி தேர்வு எழுதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு இருந்தார். ஆசியாவின் முதல் செயற்கை வைர தொழிற்சாலை எந்த ஊரில் அமைந்தது? என்ற கேள்வி எங்கள் தேர்வில் இடம் பெற்றது என்றார். அதில் என்ன சிறப்பு என்றேன். அந்த ஊர் மேட்டுப்பாளையம் என்றார். ஆச்சர்யமாக இருந்தது. நமது ஊருக்கு இப்படி சிறப்பை ஏற்படுத்தியவரை நமது மேட்டுப்பாளையம் வாசகர்களுக்காக சந்தித்தோம்.
அவர், கிட்டு என்று அன்போடு அழைக்கப்படும் என். கிருஷ்ணசாமி அவர்கள்.. மகாஜன பள்ளிகளின் செயலர், ரோட்டரி சங்கத்தின் கௌரவ உறுப்பினர், மேட்டுப்பாளையம் புத்தகத் திருவிழா வரவேற்புக் குழுவின் தலைவர், தொழிலதிபர் பல ஆளுமைக்கு சொந்தகாரர்.
விமானம் வைத்து இருந்தது, ரேசன் பெட்ரோல், கரிவண்டி, அப்போதைய சரக்கு போக்குவரத்து என ஆச்சர்யபடுத்திய அவரின் சந்திப்பிலிருந்து.....
உங்கள் பள்ளி படிப்பு
ஆந்திரா மதனபள்ளியில் 9 வகுப்பு வரை படித்தேன். 10 ம் வகுப்பு மேட்டுப்பாளையம் மகாஜனபள்ளி. பியுசி பெங்களூரில் படித்தேன். கல்லூரி படிப்பு பெங்களூரில் செயின்ட் ஜோசப் கல்லூரியில் 4 வருடம் ;படிக்க வேண்டும். ஆனால் 3 வது வருடத்திலேயே கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டு தொழிற்சாலையை கவனிக்க வேண்டும் என்பதற்காக வந்து விட்டேன்.
ஆசியாவின் முதல் செயற்கை வைர தொழிற்சாலை துவக்கிய அனுபவம்...
என் அண்ணன் அமெரிக்காவில் படித்தார். சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு கப்பலில் தான் செல்ல முடியும். பயண காலம் ஒன்றரை மாதம். கிளாஸ் பாக்டரி தொடர்பான படிப்பு. படித்து முடித்த பின் கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை ஆரம்பிக்க விருப்ப பட்டார். அந்த தொழிற்சாலை துவக்க முடியவில்லை. பின்னர் சுவிட்சர்லாந்து நிறுவனத்துடன் இணைந்து செயற்கை வைரம் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்கினோம். அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆக என் பணி துவங்கியது.
அப்போதைய முதல்வர் காமராசர் அவர்களை பார்த்து தொழிற்சாலை ஆரம்பிக்க போவதாக சொன்ன போது, உடனே கோவை மின் பொறியாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்லி மினசார வசதி ஏற்படுத்தி கொடுக்க சொன்னார். .கோவையில் இருந்து தொழிற்சாலைகளுக்கான தனி மின் இணைப்பு உடனே கொடுத்தார்கள். அதன் பின்பு 4 வருடங்கள் கழித்து தான் தொழிற்சாலை அமைத்தோம். தொழிற்சாலை அமைக்க அரசு ஆர்வமாக இருந்தது.
தொழிற்சாலை பணியாளர்களுடன் உங்கள் உறவு...
எங்கள் தொழிற்சாலையில் தொழிலாளர்களுடன் எப்போதும் சுமூக உறவோடு இருக்கிறோம், அவர்களின் தேவையை அவர்கள் கேட்கும் முன்னரே நிவர்த்தி செய்து விட்டால் எந்த தொழிற்சாலையிலும் பிரச்சினை வராது. எங்கள் தொழிலார்களை அவர்கள் வயது சிறியவர்களாக இருந்தாலும் ஒருமையில் அழைக்க மாட்டேன்.
வாகனங்கள் மேல் உங்களுக்கு காதல் என்று கேள்விபட்டிருக்கிறோம். உங்களுக்கு பிடித்த முதல் வண்டி வாங்கிய அனுபவம்...
Lml வெஸ்பா வண்டியை, ரூபாய் இருநூற்று ஐம்பது முன்பணம் கொடுத்து பதிவு செய்தேன். 15 வருடங்கள் கழித்து கிடைத்தது. அப்போது இந்தியாவில் தயாரிப்பு கிடையாது. திருப்பதியில் மொபெட் தயாரிக்கும் நிறுவனம் மட்டும் இருந்தது.
இப்போதெல்லாம் தொழில் வளர்ந்து விட்டது, தொலைபேசியில் கூப்பிட்டாலே வந்து பணம் வாங்காமல் வீட்டில் தரும் அளவு உற்பத்தி பெருகி விட்டது.
உங்கள் முதல் கார் அனுபவங்கள்...
ஸ்டாண்டர்ட் 8 என்னுடைய முதல் கார். பெட்ரோல் வேண்டும் என்றால் ரேசன் மூலமே அதுவும் குறிப்பிட்ட அளவு மட்டுமே கிடைக்கும். அப்போது டீசல் வாகனங்கள் கிடையாது. மேட்டுப்பாளையத்தில் ஒரே ஒரு பெட்ரோல் பங்க் மட்டுமே இருந்தது. அது அரசு மருத்துவ மனைக்கு எதிரில் இருந்தது. அதற்கு முன்பு கோவைக்கு சென்று என் அப்பா பெட்ரோல் வாங்கி வருவார். அப்போது ரேசன் மூலமே பெட்ரோல் கிடைத்ததால் பெட்ரோல் தேவைக்கு போதாது என்பதற்காக லாரி வாங்கி வீட்டில் வைத்து கொண்டு அந்த லாரிக்கு கூப்பன் மூலம் கிடைக்கும் பெட்ரோலை கொண்டு சிலர் கார் ஓட்டுவார்கள்.
அப்போது சில கார்கள் விறகுகரி மூலம் ஓடி கொண்டு இருந்தன. கரிஎரிப்பதன் மூலம் வெளிவரும் வாயு மூலம் வண்டி இயங்கும். அப்போது ஓடிய டிவிஎஸ் பஸ், மற்றும் லாரிகளும் கரி மூலமே இயக்கப்பட்டது. அந்த வாகனங்களை கரி வண்டி என்று அழைப்பார்கள். கரி மூட்டை போட்டு ஒரு மணி நேரம் சுற்றனும். அப்போது காஸ் உருவாகி வண்டி ஓடும்.
சரக்கு போக்குவரத்து எப்படி இருந்தது.?
கோயமுத்தூர் வெரைட்டி ஹாலில் இங்குள்ள வியாபாரிகளுக்கு சரக்குகள் வரும். சுக்குட்டப்பன் சர்வீஸ், 4 மாட்டு வண்டிகள் வைத்து இருந்தார்கள். அங்கு வெரைட்டி ஹாலில் ஏற்றப்படும் சரக்குகள், மாட்டு வண்டிகளில் இங்கு வரும். வண்டி ஓட்டுபவர் தூங்கி விட்டாலும், மாடு சரக்கை கொண்டு வந்து விடும்.
விமானம் வைத்து இருந்ததாக கேள்விப்பட்டோம், அது பற்றிய அனுபவங்கள்?
எனக்கு விளையாட்டில்ஆர்வம் உண்டு. 1970, 1972 என்று நினைக்கிறேன் ப்ளையிங் க்ளப் சென்று லைசன்ஸ் வாங்கி விட்டேன்.. நான் குடும்பத்தில் கடைசி பையன். எனவே கொஞ்சம் செல்லம் அதிகம். விமானம் ஒட்டி பழகி விட்டு, வீட்டில் விமானம் கேட்டேன். வாங்கி கொடுத்தார்கள். அது மட்டுமல்ல, விமானம் இறக்க வேண்டுமே, வெள்ளிபாளையம் தோட்டத்திலேயே 80 ஏக்கர் இடம் ஒதுக்கி, அந்த இடத்தில் ஓடுதளம் அமைத்தும் கொடுத்தார்கள். ஆனால் வீட்டில் யாரையும் விமானத்தில் ஏற்ற வில்லை. ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இருபது வருடங்கள் விமானம் வைத்து இருந்தேன். சென்னை, மைசூர் போவேன்.
ஜிபிஎஸ் இல்லாத காலத்தில் விமானம் ஓட்டுவது கடினம் அல்லவா ?
அப்போது எங்கள் வீட்டில் போன் இல்லை. ஸ்டேஷன் சென்று, சென்னை ஏர்போர்ட்க்கு போன் செய்து, விமானத்தின் எண்ணையும், வரப்போகும் நேரத்தையும் கூறி பதிவு செய்ய வேண்டும். ஜிபிஎஸ் வசதி எல்லாம் கிடையாது, காவிரி ஆறு, திருவண்ணாமலை மலை, கடல் என்று அடையாளம் கண்டு சென்னை விமான நிலையம் செல்வேன். தோராயமாக இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்தில் சென்னைக்கு செல்வேன்.
மலைப்பாக இருந்தது இவரின் அனுபவங்கள். இவரிடம் நாம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. நேரம் கருதி இப்போதைக்கு விடைபெற்றோம்.