காய்கறி மண்டிகள் உருவான வரலாறு

 


வியாபாரிகள் சங்க சங்கத்தின் தலைவர்  ஹெச்.பி.ஹம்சா உடன் நேர்காணல்


மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகள் தமிழகத்தின் ஏன் இந்திய அளவில் புகழ் பெற்றது. இங்கு உள்ள மண்டிகளில் இருந்து இந்தியா முழுவதும் மட்டும் இன்றி சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி நடைபெறுகிறது. மேட்டுப்பாளையத்தில் கிழங்கு மற்றும் காய்கறி மண்டிகள் உருவான வரலாறு குறித்த தகவல்களை நமது வாசகர்களுக்கு அளிப்பதற்காக, இந்த துறையில் பல ஆண்டுகளாக அனுபவமிக்கவரான ஹெச்.பி.ஹம்சா அவர்களை சந்தித்தோம்.


ஹெச்.பி.ஹம்சா காய்கறி முன்னணி வர்த்தகர்களில் ஒருவர். காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் மேட்டுப்பாளையம் தலைவர். கேரளா சமாஜத்தின் மேட்டுப்பாளையம் தலைவர், அகில இந்திய மலையாளிகள் கூட்டமைப்பின் (FAIMA) நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் மேட்டுப்பாளையம் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர் என்று பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இனி அவருடன்...


 


ஆங்கிலேயர் உண்ணும் இங்கிலீஷ் காய்கறி மண்டிகள் நமது ஊரில் எப்படி உருவானது?


ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்த போது அவர்களுக்கு மிகவும் பிடித்த பகுதி நீலகிரி மலை பகுதிகள். ஏனென்றால் இங்குள்ள தட்பவெப்பம் அவர்கள ஊரை போன்று குளிர்ச்சியாக இருந்தது. வெயில் காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் தான் இருப்பார்கள். அதுமட்டும் அல்ல இராணுவ படைப் பிரிவும் இங்கு இருந்தது. அப்படி இங்கு இருந்த ஆங்கிலேயர்கள் அவர்கள் உண்ணும் உருளைக்கிழங்கு, கோஸ், கேரட், பீட்ரூட், நூல்கோல் போன்ற காய்கறிகளை இங்கு பயிரிட்டு வளர்த்தார்கள். சுமார் 1840 வருட துவக்கத்தில்  நீலகிரி மலை பகுதிகளில் உருளைக்கிழங்கு விதைகளை ஹாலந்து நாட்டிலிருந்து கொண்டு வந்து வளர்க்க துவங்கினர். இன்றும் ஊட்டி உருளைக்கிழங்கை ஹாலந்து கிழங்கு என்றும் அழைப்பார்கள். அப்படி முதலில் இங்குள்ள ஆங்கிலேயர்களின் தேவைக்காக வளர்க்கப்பட்ட இங்கிலீஷ் காய்கறிகள் பின்னர் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டன. அதற்காக விற்பனை மண்டிகள் மேட்டுப்பாளையத்தில் துவக்கப்பட்டன.


      அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நமது ஊர் வியாபாரிகள் கொள்முதலுக்காக ஊட்டிக்கு நடந்து போவார்கள். அந்த மாதிரி போனவர்கள் தான் எஸ்.வி.எம் மற்றும் வி.என்.ஆர் போன்றவர்கள். நீலகிரியில் விவசாயம் பெருகவே  மாட்டுவண்டியிலும், பார்க்கப் வண்டியிலும் (மினி லாரிமாதிரி) மேட்டுப்பாளையம் ரயில்வே நிலையத்திலிருந்து தினசரி சரக்குகள் வெளியூருக்கு  அனுப்பப்பட்டன.


      நம்ம ஊர் இரயில் நிலையம் சிறியதாக இருந்தாலும், கூட்ஸ் பெரியதாக இருக்க காரணம் இதுதான். இரயில் நிலைய சாலையில் தற்போது தார் சாலை அமைத்திருக்கிறார்கள். முன்பு சிமெண்டு ரோடு இருக்கும். அதில் மாட்டு வண்டியின் தடம் பதிந்திருக்கும். இதெல்லாம் காய்கறிகளை ஏற்றிவந்த வண்டிகளின் அச்சு. உருளைக்கிழங்கு இங்கிருந்து இந்தியா முழுவதும் உள்ள ஊர்களுக்கு சென்றது.


நீங்கள் காய்கறி விற்பனை துறையில் எப்போது வந்தீர்கள்? அப்போது எப்படி காய்கறி மண்டிகள் செயல்பட்டன?


1979ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக நான் மேட்டுப்பாளையத்தில் காய்கறி விற்பனை வணிகத்தில் இருக்கிறேன். அந்த காலத்தில் இரவு நேரத்தில் சரக்கு வரும். பகல் நேரத்தில் ஏலம் விடுவது வழக்கமாக இருந்தது. அப்போது பெரிய கடை என்பது  RSB, MPB, SVM ,VTS ,SRT, ASK , NVC  இன்னும் சில கடைகள் இருந்தன. பகல்நேரத்தில்  ஒவ்வொரு கடையாக  ஒரு பைலட் தலைமையில் ஊர்வலமாக வந்து கடையில் காய்கறிகளை ஏலம் விடுவார்கள். யார் அதிக விலைக்கு கேட்கிறாரோ அந்த விலை விற்பனை விலையாகும். இங்குள்ள கமிசன் மண்டிகள் தங்கள் கமிசனை விவசாயிகளிடம் பெற்றுக் கொள்வார்கள்.


பின்னர் கடைகள் பெருக, பெருக வியாபாரம் பெருகியது. மூன்று, நான்கு  மாதங்கள் மட்டுமே நடைபெற்ற வியாபாரம் வருடம் முழுவதும் நடைபெற தொடங்கியது. பல மாநிலங்களில் இருந்து சரக்கு வரவழைக்கப்பட்டது. ஹாசன், தாளவாடி போன்ற பகுதிகளிலிருந்து காய்கறிகள் வரவழைக்கப்பட்டது. இதற்கு காரணம்  ஊட்டி கோஸ் போன்ற காய்கறிகள் 6 மாதத்துக்கு மேல் வராது  எனவே மற்ற மாநில காய்கறிகளை கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டது.


பகல் நேரத்தில்  ஏலம் விடும்போது எனக்கு சில கடைகளை தவிர மற்ற  கடைகளில் சரக்கு கிடைக்காது. அதனால் இரவு நேரத்தில் வரும் சரக்குகளை இரவே வாங்கி இரவே விற்று விடுவேன். பின்னாளில் இரவு நேரத்தில் ஏலம் விடும் வழக்கம் உருவானது. பின்னர் காலப்போக்கில் லாரிகள் வரத்து அதிகமானது. கடைகள் பெருகி வருடம் 365 நாட்களும் வியாபாரம் நடைபெற தொடங்கியது.


இங்கிருந்து காய்கறிகள் எங்கெங்கு செல்கின்றன?


பிற மாநில காய்கறிகளும் வரதொடங்கியதால் மேட்டுப்பாளையம் நகரம் காய்கறி வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி பெற்றது. உருளைக்கிழங்கு உட்பட பல காய்கறிகள் தரம் பிரித்து மாநிலம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. முன்பு கேரளமாநிலத்திற்கு செல்லும் சரக்குகள் எர்ணாகுளம் பகுதிக்கு சென்று அங்கிருந்து கேரளாவின் பிற மாவட்டங்களுக்கு செல்லும். ஆனால் இப்போது கேரளா மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலுக்கும் மேட்டுப்பாளையத்திலிருந்து நேரடியாக செல்கிறது.


நமது ஊரிலிருந்து லட்சத்தீவுக்கு கேரளா வழியாக செல்கிறது. மேலும்  பிஜு தீவு , துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் நம் ஊரிலிருந்து ஏற்றுமதியாகிறது.


முன்பு ஊட்டி சாலையில் செயல்பட்ட காந்தி மைதானம் அன்னூர் சாலையில் இடம் மாற்றப்பட்டது ஏன் ?


வர்த்தகம் பெருகியதால் ஊட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியவில்லை. இதனால் காவல்துறைக்கும் வியபாரிகளுக்கும் அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகளும், வாக்குவாதங்களும் அடிக்கடி ஏற்பட்டது. இதனால் காய்கறி மண்டியை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. முதலில் சிறுமுகை சாலையில் மலிவான விலையில் தோட்டங்கள் வாங்கி  மார்கெட் அமைக்கலாம் என நினைத்தோம். ஆனால் பள்ளிவாசல் மற்றும் பூக்கடை போன்றவைகளால் ஊட்டி சாலையை போல போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் என்பதால் அன்னூர் ரோட்டில் SVM அவர்களின் பதினொரு ஏக்கர் நிலத்தை பேசி முடித்தோம். அவர் என்னிடம்  இடத்தை ஒப்படைத்தார். நான் அந்த இடத்தை VEGETABLE CHAMBERS க்கு ஒப்படைத்தேன். அவர்கள் வியாபாரிகளிடமும் குறிப்பிட்ட தொகையை வசூலித்து (என்னை தவிர) எல்லோருக்கும் கடைகள் கிடைக்க ஏற்பாடு செய்தேன். இன்று அது சிறப்பாக செயல்படுகிற மார்க்கெட்டாக விளங்குகிறது.


உதகை சாலை மற்றும் நெல்லிதுறை சாலையில் உள்ள காந்தி மைதானத்தில் காய்கறிகள் மண்டிகள் முற்றிலும் அகற்றப்பட்டு உருளைக்கிழங்கு மண்டிகள் மட்டும் செயல்படுகிறது. அங்கேயே என்.எஸ்.வி போன்ற பூண்டு மண்டிகளும் இயங்கி வருகின்றன.


உருளை கிழங்கு மண்டிகளுக்கு எங்கு இருந்தெல்லாம் கிழங்கு வருகிறது?


ஒரு காலத்தில் ஊட்டியிலிருந்து வந்த உருளைக்கிழங்கு உற்பத்தி குறைந்து விட்டது. இப்பொழுது பஞ்சாப்  மாநிலம் ஜலந்தர் கிழங்கு,  கல்கத்தா , இந்தூர், ஐதராபாத், புனே, குஜராத் கிழங்கு மற்றும்  பெங்களூர் கோலார் கிழங்குகள் வருகிறது. குஜராத் மற்றும் கோலார் கிழங்குகள்  அதிகபட்சமாக எண்பது சதவீதம்  அளவில் வருகிறது.


கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடு எப்படி இருந்தது?


என்.வி.ஜி.ஏ என்கிற ஜெர்மன் சொசைட்டி பழைய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பாக்குகாரத் தெருவில் இருந்தது இது அந்த காலத்தில் அதிகமான வியாபாரம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த இடம். கிழங்கு தவிர மற்ற இங்கிலீஷ் காய்கறிகள் இங்கு பெரிய அளவில் விற்பனைக்கு வரும். நாளடைவில் இந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது. 


நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் என்கிற என்.சி.எம்.எஸ்.  இது நீலகிரி விவசாயிகளுக்காகவே உருவாக்கப்பட்டது. அரசின் உதவியோடு சிறப்பாக நடந்து வந்தது. என்.சி.எம்.எஸ். ல் எடை மற்றும் தரம் சிறப்பானதாக இருக்கும். இங்கு ஆயிரக்கணக்கான மூட்டைகள் கிழங்கு விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த நிலை மாறி தற்போது மிக குறைந்த அளவிலேயே கிழங்கு வருகிறது. ஏனென்றால் ஊட்டி கிழங்கு விவ்சாயிகளுக்காகவே இந்த சங்கம் துவக்கப்பட்டதால் ஊட்டி தவிர வேறு பகுதிகளில் இருந்து வருகிற கிழங்குகளை இங்கு விற்க முடியாது. மேலும் ஊட்டியில் கிழங்கு உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது.


அது மட்டும் இன்றி ஆரஞ்சு,  பேரிக்காய், பிளம்சு போன்ற பழங்களும் விறபனைக்கு வரும். அந்த பழங்களை விற்பனை செய்ய மண்டிகளும் இயங்கின. ஆனால் காலப்போக்கில் அந்த பழங்கள் உற்பத்தி நீலகிரியில் குறைந்த காரணத்தால் இங்குள்ள பழமண்டிகளும் மூட வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.


இங்குள்ள கோஸ்,தற்காரி மற்றும் கிழங்கு மண்டிகளுக்கு பின்னர் வரலாற்று சிறப்பு உள்ளது. இதை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை மட்டும் அல்ல நமது கடமையும் கூட.


Featured Post

கிராமியக்கலைஞர் பத்திரப்பன்

கிராமியக்கலைஞர்  பத்திரப்பன்          மேட்டுப்பாளையம், தாசம்பாளையத்தில் வசிக்கும் கிராமியக் கலைஞர்  திரு.பத்திரப்பன்  (வயது 87) . இவருக்கு த...