இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அப்படி யாராவது சொல்லியிருந்தால் அது மிகப்பெரிய நகைச்சுவையாக அன்று இருந்திருக்கும். ஆனால் உண்மை நிலவரம் வேறு. கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது பவானி ஆறு. நிறைந்த தண்ணீர் அங்கு இருந்தும், நமது ஊரில் குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலைமை இருப்பதாக வேதனை குரல்கள் கேட்கின்றன. இந்த கட்டுரையில் நாம் குறிப்பிடுவது நகராட்சிப் பகுதிகளை மட்டுமே. மற்ற பகுதிகளின் நிலை இதை விட படு மோசமாக இருக்கிறது.
முதலில் நகராட்சி பகுதிகளில் ஏற்கெனவே உள்ள குடிநீர் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
மேட்டுப்பாளையம் நகராட்சி மூலம் 1948, 1963,2000 வருடங்களில் மூன்று குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 1948 ம் வருடத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தின் படி சத்தியமூர்த்தி நகர் சாமண்ணா நீருந்து நிலையத்தில் இருந்து நேரிடையாக மேல்நிலைத்தொட்டிக்கு செல்லாமல் சத்தியமூர்த்திநகர், மகாதேவபுரம், பெருமாள் கவுண்டர் லேஅவுட், நெல்லிதுறை சாலையில் உள்ள ரயில்வே கேட்டை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படுகிறது.
1963ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர் திட்டத்தின் படி பேருந்து நிலையம் அருகே உள்ள நீருந்து நிலையத்தில் இருந்து எல்.எஸ்.புரம், உதகை சாலை, மார்க்கெட், கோவை சாலை, வ.உ.சி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
2000 ஆண்டு மணிநகர், கே.கே.நகர், பழைய நகராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் மேல்நிலைதொட்டிகள் அமைக்கப்பட்டு அதை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் போதுமான அளவு குடிநீர் மக்களுக்கு கிடைத்து வந்தது.
அதிகமான குடியிருப்புகள்
அதற்கு பின்பு புதிய குடியிருப்புகள் தோன்றிய பின்பு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட தொடங்கியது. உதாரணமாக முல்லைநகர், வசந்தம் நகர், நாடார் காலனி, மண்டேலா நகர் போன்ற பகுதிகள் உருவான பின்பு மணி நகர் மேல்நிலைதொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இது உதாரணம் மட்டுமே. இது போன்று பல பகுதிகளில் அதிகமான குடியிருப்புகள் மூலம் குடிநீர் பற்றாக்குறை அதிகமாகி விட்டது.
கே.கே.நகர் மேல்நிலைதொட்டி பத்து லட்சம் லிட்டர் கொள்ளளவை கொண்டது. ஆனால் இந்த தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் இங்கும் பற்றாகுறை நிலவுகிறது. சங்கர் நகர் பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்தது. 2016ம் ஆண்டு சங்கர் நகர் பகுதியில் ஒரு மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வழங்க தொடங்கிய பின்பு இந்த பகுதிகளில் பிரச்சினை இல்லை.
பாதாள சாக்கடை பணிகள்
இப்போது பாதாள சாக்கடை பணிகள் தொடங்கிய பின்பு பல இடங்களில் குடிநீர் குழாய்கள் சேதம் அடைவதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் பல இடங்களில் தண்ணீர் விரயமாகிறது. மேலும் மின்தடை சமயங்களிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆட்கள் பற்றாக்குறை
இவ்வளவு மக்கள் வசிக்கும் நகராட்சியில் குடிநீர் வழங்க வெறும் 12 பணியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அடிக்கடி உடைக்கப்படும் குழாய்களை சரி செய்யவே இவர்கள் கடுமையாக போராட வேண்டி இருக்கிறது.
மக்களின் கோரிக்கைகள்
உடைந்த குடிநீர் குழாய்களை மாற்றி அமைத்து தரமான குழாய்கள் பாதிக்கப்பட வேண்டும். கசியும் குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் வழங்கும் துறையில் பணியாளர்களை அதிகரிக்க வேண்டும்.
மேல்நிலைத் தொட்டிகளை அதிகரித்து 24 நேரமும் குடிநீர் வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நடவடிக்கை எடுத்து வருகிறோம்- ஆணையர் திரு.காந்திராஜன் விளக்கம்
ஆணையர் திரு.காந்திராஜன் அளித்த விளக்கம், "பவானி ஆற்றில் இருந்து நீர் எடுக்கும் இடத்தில் மண் சேர்ந்து சகதியாக இருக்கிறது. அதை வரும் மே 20, 21 தேதிகளில் தூர்வார இருக்கிறோம். பாதாள சாக்கடை திட்டத்திற்காக செய்யப்படும் பணிகளால் குடிநீர் குழாய்கள் சேதமாகிறது. அதையும் வேகமாக சரி செய்து கொண்டு இருக்கிறோம். மேலும் ஓரிரு மாதங்களுக்குள் நகராட்சியில் தினமும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். அதற்காக குடிநீர் குழாய்களை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் குடிநீர் பற்றாக்குறை சில இடங்களில் இருக்கிறது. இதை சரி செய்ய தீவிர முயற்சியில் இருக்கிறோம். விரைவில் இவற்றை சரிசெய்து தினமும் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்".