மேட்டுமாநகரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டைய அடையாளங்களில் குறிப்பிடத்தக்க இடம் சிஎஸ்ஐ தூய யோவான் ஆலயத்திற்கு உண்டு. மேட்டுப்பாளையம் உதகமண்டலம் சாலையில் பயணிக்கையில் வானுயர ஓங்கி நிற்கும் சிலுவை தாங்கிய கோபுரத்தையும் மணிக்கூண்டையும் அண்ணாந்து பார்க்காதோர் எவருமிருக்க முடியாது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் தலமாகவும், தேவனைத் துதிக்கும் கீதமுழக்கங்களோடே தெய்வீகம் கமழும் வளாகமாகவும் திகழ்கிறது சிஎஸ்ஐ தூய யோவான் தேவாலயம். ஒருபுறம் சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு வாழ்வின் அடித்தளக் கல்வியை போதிக்கும் நடுநிலைப்பள்ளி. மறுபுறம் வாழ்ந்து முடிந்து இறையடி நிழலில் இளைப்பாறும் அமரர்களுக்கான கல்லறைத் தோட்டம். நடுவே ரம்மியமான சூழலில் ஆண்டவன் அருள் பரப்பும் ஆலயம்.
தென்னிந்திய திருச்சபையின் கோவை மண்டலத்தின் ஆளுகைக்குட்பட்டு செயல்படும் இவ்வாலயம் சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் வரலாறு கொண்டது. கிபி 1850 ஆம் ஆண்டுகளில் டபிள்யூ.பி.ஆடிஸ் அவர்கள் தலைமையில் தற்போதைய பெரியநாயக்கன்பாளையம் கூடலூர் பகுதியில் செயல்பட்ட ஆங்கிலக் கல்வி நிலையத்தின் ஆசிரியரும் கிறித்தவ உபதேசியாருமான ஏசடியான் என்பவரால் காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, நெல்லித்துறை போன்ற பகுதிகளில் சமய சுவிசேஷப் பணிகள் நடைபெற்றன. பிறகு மேட்டுப்பாளையத்தில் மிஷனரி பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு Rev.சாமுவேல் ஜோன்ஸ் என்பவர் W.B.ஆடிஸ் அவர்களால் பரிந்துரைக்கப்படுகிறார்.
1864ஆம் ஆண்டில் மிஷன் பணிகளுக்கான தனி நிலையமாக மேட்டுப்பாளையம் அறிவிக்கப்பட்டு புதிய மிஷனின் சுவிசேஷ ஊழியராக உண்மையுடையார் என்பவர் நியமிக்கப்படுகிறார். துவக்க காலகட்டத்தில் சுமார் அறுபது பேர்வரை தேவவிசுவாசிகளாக பிரார்த்தனைகள் ஏறெடுக்குமிடமாகவும், லண்டன் மிஷன் ஸ்கூல் எனும் பெயரில் ஆங்கில-இந்திய கல்விக் கூடமாகவும், சிறியளவிலான புத்தகநிலையம் மற்றும் மருத்துவச் சிகிச்சை ஸ்தலமாகவும் செயல்பட்டு வந்துள்ளது.
1867ஆம் ஆண்டு உண்மையுடையார் இந்த இறையில்லத்தின் இந்தியப் பாதிரியாராக அங்கீகரிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 1874ஆம் ஆண்டு ஆலயக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து முழுமையான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அப்போது முதல் இன்றைய நாள் வரை ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளும் புதன்கிழமை வாரக்கூடுதல்களும் தங்குதடையின்றி நடைபெற்றுவருகின்றன.
ஆரம்பகாலத்தில் லண்டன் மிஷன் நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி 1950களுக்கு பிறகு தென்னிந்திய திருச்சபை வழிநடத்தும் இந்த தேவாலயத்திற்கு அடித்தளம் அமைத்தவர் திருவாளர் உண்மையுடையார் என்றால் அது மிகையாகாது. எல்லாம் வல்ல இறைவனின் கிருபையாலேயே அவருக்கு இது சாத்தியமானது. கோவில் கட்டுமான காலத்தினிடையே பல வருடங்கள் தனது வீட்டின் நெடிய தாழ்வாரத்தையே வழிபாடு நடத்தவும், பாலர் பள்ளி செய்பாட்டுக்கும் அளித்து பெரும்பணி ஆற்றியுள்ளார். அந்நாட்களில் தமிழ் கிறித்தவ மறைசாட்சிகளும், கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய சிப்பந்திகளும் இன்னும் பலருமெனத் தங்கள் ஆன்மீகத் தேடலுக்கான கூடமாக உண்மையுடையாரின் இல்லமே நிறைந்து காணப்படுமாம்.
மானுடம் போற்றும் மருத்துவச் சேவை:
போற்றுதலுக்குரிய பெரியவர் உண்மையுடையாரின் மருத்துவப் பணிகள் அளப்பரியதாகும். நோய் நொடிகளால் நலிந்துபோய்த் தம்மைத் தேடிவரும் எளியோர் பலரின் பிணி தீர்த்து பெரும்பணி செய்ததை சரித்திரம் பதிவு செய்கிறது. பெரும்பாலும் இயற்கை மருத்துவச் சிகிச்சை, தேவையுள்ளோருக்கு ஆங்கில அலோபதி மருந்துகள் வழங்கியுள்ளார். ஆயுர்வேத சித்த மருந்துகளைத் தனது மேற்பார்வையில் தயாரிக்க வல்லவரான உண்மையுடையாருக்கு ஆங்கில மருந்துகளை அயலகமாம் பிரித்தானிய தேசத்திலிருந்து தருவித்துத் தரும் பேருதவியை கோயம்புத்தூர் ஸ்டேன்ஸ் பாதிரியார் அவர்கள் செய்துகொடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் ஒரு சமயம் பிளேக் நோய் பரவி பலநூறு உயிர்கள் பலியானபோது உண்மையுடையாரின் சீரிய மருத்துவச் சேவையால் ஏராளமானோர் உயிர்பிழைத்தனர். வெளியூர்களில் இருந்தெல்லாம் ரயில் மூலமாக பலரும் வைத்தியம் பார்க்கும் நிமித்தமும், தேவ ஆராதனை நிகழ்த்தவும் இங்கு வரலாயினர். அதுபோன்று வந்த பல ஏழை எளிய மக்களுக்கு அன்னமிட்டு பசிபோக்கும் அரும்பணியையும் சிரமேற்கொண்டு செய்துள்ளார் உண்மையுடையார்.
மிகப்பெருஞ் செல்வந்தர்கள் பலரும் அருட்கொடை அளித்தும் நிலச் சுவான்தார்கள் பலரும் பொருட்கொடை கொடுத்தும் உண்மையுடையாரின் தரும பணிகளுக்கு உதவிபுரிந்தததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.அண்ணாரின் பெருமுயற்சியாலும், மெய்யன்பர்கள் பலரது முன்னெடுப்புகளாலும் ஆண்டவரின் திருவருளாலும் சமூக மேம்பாட்டுக் கேந்திரமாக உருவெடுத்துள்ளது இவ்வாலயம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்காலந் தொடங்கி கல்விச்சேவை அளித்துவருகிறது மேட்டுப்பாளையம் லண்டன் மிஷன் ஸ்கூல் என்றறியப்படும் தற்போதைய சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி. நம் நகருக்கு புகழ்சேர்க்கும் பலரையும் இன்னும் ஏராளமான எளிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கும் ஆரம்பக் கல்வி போதிக்கும் ஆலயம் இது. இப்போதுள்ள பள்ளிக் கட்டிடம் 1907ஆம் ஆண்டு திருவாளர் ஸ்டேன்ஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டதாகும். கல்விப்பணியும் சமயப்பணியும் ஒருங்கே நடைபெற்றுவந்தது. 1898க்குப் பிறகு உபதேசியார் சி.ஜோசப், அருட்திரு.ராஜரத்தினம் உள்ளிட்டோரின் வழிகாட்டுதல்களால் சிறப்புற்ற இத்தலம் 1955ஆம் ஆண்டில் காலஞ்சென்ற பிஷப் அப்பாசாமி அவர்களால் தூய யோவான் ஆலயம் என பெயர் சூட்டப்பட்டது. அதன்பிறகே முழுமையாக தென்னிந்திய திருச்சபையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படத் தொடங்கியது.
1970ம் வருடம் முதலாக பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 1988ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது இப்போது நாம் காணும் ஆலயம்.
வழிபாட்டுக் கூடம், விசேஷ வைபவங்களுக்கான மண்டபம், விருந்து உபசரிப்பு பகுதி, திறந்தவெளி கலையரங்கம் என மிகப் பிரம்மாண்டமாய் பயனளிக்கிறது சிஎஸ்ஐ ஆலயம். இளைஞர்கள் திறன் மேம்பாட்டுப்பணிகள், மகளிருக்கான ஐக்கிய சங்கமம், தன்னார்வத் திருத்தொண்டர்கள், தேவகீதப் பாடகர்கள் இசைக்குழு என சகலதுறைகளையும் அலங்கரிக்கிறார்கள் இவ்வாலய பக்தர்கள்.
ஆலயத்தின் தற்போதைய ஆயராக அருள்திரு.வில்சன்குமார் அவர்கள் வழிநடத்துகிறார்கள்.
"இறைவனின் வாசலில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து அவருடைய நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்"
(சங்கீதம்100:4) என்கிறது பரிசுத்த வேதாகமம்.
தேவாலயத்தைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரின் ஆன்மாக்களையும் ஆட்கொள்கிறது தேவனின் பேரன்பு.