கிராமியக்கலைஞர் பத்திரப்பன்

கிராமியக்கலைஞர்  பத்திரப்பன்


        மேட்டுப்பாளையம், தாசம்பாளையத்தில் வசிக்கும் கிராமியக் கலைஞர்  திரு.பத்திரப்பன்  (வயது 87) . இவருக்கு தற்போது இந்தியாவின் பெருமை மிகு விருதில் ஒன்றான  பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.  இவருக்கு ஏற்கெனவே மாநில அரசின் கலைமாமணி மற்றும் கலைமுதுமணி உட்பட பல விருதுகளும் அளிக்கப்பட்டு உள்ளது.

        இவர் நமது மேட்டுப்பாளையம் தொகுதியில் பெருவாரியான இடங்களில்,  கோயில்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர்.  மேலும் விவசாயி, ஒயிலாட்டக் கலைஞர், கலை இலக்கிய பெருமன்றத்தை சேர்ந்த முற்போக்கு சிந்தனையாளர் மற்றும் பல  பன்முக தன்மை கொண்டவரான  திரு பத்திரப்பன் அவர்களின் நேர்காணல் முன்பு நமது மேட்டுப்பாளையம் இதழில் வெளியாகி இருந்தது. அந்த நேர்காணல் இப்போது மீண்டும்...

கிராமியக் கலைகள் உருவான வரலாறு பற்றி கூறுங்கள்?

       விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலத்தில் கிராமியக் கலைகளை மனிதன் வாய்மொழியாக பேசி வளர்த்தான். இந்த  கலை மொழி தோன்றுவதற்கு முன்பே தோன்றியது ஆகும்.  இந்த  தொன்மை வாய்ந்த கலை வடிவங்கள்  விஞ்ஞானம் வளர்வதற்கு முன்பு  இயற்கையோடு இணைந்து வளர்ந்தன.  நமது முன்னோர்கள் கதைச்சொல்லியும், ஆடியும், பாடியும், மனிதனை நெறிப்படுத்தியும், பண்படுத்தியும் நல்லதொரு  பண்பாட்டு முறையை இக்கலைகளின் மூலம் அமைத்துக் கொடுத்தனர். அந்த பண்பாடுகள் தான்  இப்பொழுது வரை நீடிக்கிறது.  

         அந்த காலத்தில் மனிதன் துணி அணிவது முதல் அனைத்திற்கும்      முன் நிற்கும் சாமியை  (GOD) முன் நிறுத்தி சொன்னால் தான் கேட்பார்கள். அந்த சமூக சூழல் அப்படி இருந்தது. புராணங்கள் ஆகட்டும், காவியங்கள் ஆகட்டும், பக்தி மார்க்கம் ஆகட்டும்:எல்லாம்  மனிதனை மேம்படுத்த உருவானவை. இவைகளுக்கு அடிப்படை கிராமியக் கலைகளாகும்.



நமது மேட்டுப்பாளையம் விருதுகள் நிகழ்வில்  திரு.பத்திரப்பன் 

அவர்களுக்கு  விருது அளித்த படம்


நமது ஊரில் உள்ள கிராமியக் கலைகளின் வகைகளை கூறுங்கள்?

    தாசம்பாளையத்தில் தொட்டனங்கவுடர் என்பவர் இருந்தார். அவர் ஹரிசந்திரபூமி என்ற கலையை நடத்துவார். இன்றைக்கு உள்ள அதிக மக்களுக்கு ஹரிச்சந்திரனைப் பற்றி தெரியாது. ஹரிச்சந்திரன் என்பவர் பொய் சொல்லாத ஒரு கதாபாத்திரம். எந்த சூழலிலிலும் பொய் சொல்லக்கூடாது என்ற உன்னதமான கருத்தை மக்களுக்கு சொல்வதற்காக ஆடியும் பாடியும் உருவான கலையை தொட்டனங்கவுடர் அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டு நமது தொகுதி முழுவதும் கோவில் திருவிழாக்களில் நடத்தி இருக்கிறேன்.

     அடுத்து வள்ளித் திருமணக்கதை. மோத்தேபாளையத்தை சேர்ந்த திருவப்பகவுண்டர், அவருக்கு எழுதப்படிக்க தெரியாது ஆனால் அதேநேரம் எல்லா பாடல்களும், ஆட்டங்களும் அற்புதமாக செய்வார்.  எல்லாம் வாய்மொழியாக தான் செய்வார். அத்தனையும் மனப்பாடமாக சொல்லுவார். அவரது குரல் சிறப்பாக இருக்கும். அவரை அழைத்து வந்து வள்ளித்திருமண நாடகம் நடத்துவோம். இப்பொழுதும் நடத்துகிறோம்., பகத்தூரில் இரண்யன் கூத்து இன்றும் தை மாதத்தில் 3  நாட்கள்  நடத்துவார்கள். 

     சிறுமுகையில் கோலாட்டக் குழு இருந்தது. இடுகம்பாளையத்தில் ஒயிலாட்டக் குழு இருந்தது. வள்ளிகும்மி குழு நமது தொகுதியில்  பத்து இடங்களில் இருக்கிறது. தோலம்பாளையத்தில் நளமகராஜன் கதை என பல்வேறு கலைகள்  இருக்கின்றன.. கோலாட்டம் ஒரு அற்புதமான கலை. அது  பாதுகாக்காமப்படாமல்  அழியும் நிலைக்கு சென்று விட்டது.. இப்படி நமது ஊரின் பல கலைகள் நமது கவனிப்பு இன்றி  அழிந்து வருகிறது. 

கலைகளை பாதுகாக்க ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா? 

      இன்றைக்கு கோவில்கள் பெரும்பாலும் அரசின் கையில் தான் இருக்கிறது அரசு நினைத்தால், கிராமியக் கலைகளை நடத்த வாய்ப்பு தந்தால் கலையையும், கலைஞனையும் ஒருசேர வாழ வைக்க முடியும். அரசின் கலை பண்பாட்டுத்துறை இதை கவனத்தில் கொள்ளவேண்டும். 

கிராமியக் கலையை  பாதுகாக்க மேட்டுப்பாளையம் மக்களுக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன?

     ஒவ்வொரு தெருவிலும் சாமி கோவில்கள் இல்லாத இடமே இல்லை. திருவிழாக்களுக்கு குறைந்தது ரூபாய் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை செலவு செய்கிறார்கள். கிராமியக் கலைகளுக்காக வெறும் ரூபாய் ஐந்தாயிரம் செலவு செய்தால் போதும். ஆனால் அதற்கு நாம் தயாரில்லை. சாமியின் பூஜைகள், பழக்கவழக்கங்கள் யாவும்  பழமையானது.. அந்த பழமையை விரும்பக்கூடியவர்கள், பழமையை நேசிக்க கூடியவர்கள் இந்த  பழமையான கிராமியக் கலைகளை மட்டும்  தவிர்ப்பது ஏன்? இதனால்  கலையும், கலைஞனும் அழியக்கூடும் என்பதை மட்டும்  சொல்லிக் கொள்கிறேன். 

நீங்கள் சிறுவயதில் பார்த்த பவானி ஆற்றுக்கும் இப்பொழுது இருக்கின்ற பவானி ஆற்றுக்கும் உள்ள வித்தியாசம் சொல்லுங்கள்?

     எங்களின் சிறுவயது, மேட்டுப்பாளையத்தின் பெரும் பகுதி  ஆணும் பெண்ணும் ஆற்றுக்கு சென்று  குடத்தில் தண்ணீர் எடுத்து வீட்டுக்கு கொண்டு வந்து குடித்தக் காலம். பிறகு வண்டியில் டின் கட்டி  கொண்டு வந்த காலம். பிறகு  சைக்கிளில் கொண்டு வந்தக் காலம். மின்சாரம் வந்த பின் இதெல்லாம் மறைந்தது. ஆனால் இன்று விஞ்ஞான வளர்ச்சியினால் கழிவுகள் இந்த ஆற்றில் வருவதால் பவானி ஆறு மாசுபடுகிறது. மாசுபடுவதற்கு காரணம் தொழிற்சாலைகள் தான் காரணம் என்று  கூறுகிறார்கள். அப்படியானால் தெரிந்தே  ஏன் பாதுகாக்க தவறுகிறார்கள்? 

நீங்கள் இந்த தலைமுறை இளைஞர்களுக்கு சுற்றுசூழல் பற்றி என்ன சொல்கிறீர்கள்? 

இன்றைய இளைஞர்கள் சமூக சிந்தனையுடன் கல்வி கற்க வேண்டும். சமூக உணர்வு இல்லாமல் குழந்தைகளை வளர்த்தால் நல்ல சம்பாத்தியம் கிடைக்கலாம். ஆனால் சமூகத்திற்கு பயன் இருக்காது. சமூக பொறுப்புடன் வளரக்கூடிய சந்ததிகளை உருவாக்க வேண்டும் என்பது தான் எனது தாழ்மையான வேண்டுகோள்.

தற்போதைய மேட்டுப்பாளையத்தின் வளர்ச்சி பற்றி உங்கள் கருத்து?

வளர்ச்சி என்பது, ஜனத்தொகை வளர்ந்திருக்கிறது. வீடுகள், கட்டிடங்கள் எண்ணிக்கை  வளர்ந்திருக்கிறது.. ஆனால் நல்ல   ஆரோக்கியம் இல்லை, நல்ல காற்று இல்லை, நல்ல தண்ணீர் இல்லை, நல்ல சாலைகள் இல்லை. கிராமங்களை விட்டு, விவசாயத்தை விட்டு, ஊருவிட்டு ஊருவந்தால் காசு கிடைக்கும். ஆனால் விவசாயத்தை அழித்தால் சோறுக்கு என்ன செய்வோம்? இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தின் வளர்ச்சியை பார்த்தால், வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால் இது மக்களுக்கான வளர்ச்சி அல்ல.


நேர்காணல் : இராஜேந்திரன், மஸ்தான் 

2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ பாதுகாப்பு கவசங்கள்- மேட்டுப்பாளையம்ரோட்டரி சங்கம் வழங்கியது

கொரோனா வைரஸ்- உலகமெங்கும் அச்சுறுத்தி வந்தாலும், எதிர்த்து போராடி வருபவர்கள் மருத்துவர்கள். இதனால் உலகம் முழுவதும்  பல மருத்துவர்களும் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 


 



 


 


மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு கவச உடை அரசு  மருத்துவமனைகளில் இல்லாத சூழலில் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.


இந்த நிலையில் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் ரூபாய் 700 மதிப்புள்ள  300 முழு பாதுகாப்பு கவச உடையை வழங்கி இருக்கிறது. கோயமுத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை - கொவிட் சிகிச்சை பிரிவுக்கு, வழங்கிய  250 கவச ஆடைகளை மருத்துவர் நிர்மலா பெற்றுக் கொண்டார்.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கிய 50 கவச ஆடைகளை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சேரலாதன் பெற்றுக் கொண்டார்.


 



 


மேலும் இரட்டை அடுக்கு துணியிலான 200 முக கவசமும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதற்கான முன் முயற்சியை தொடங்கிய மரு. இஸ்மாயில் அவர்களுக்கும், மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் மரு.விஜயகிரி, செயலாளர் சஞ்சய் சாங்ளா,  பொருளாளர் சீனிவாசன் மற்றும் ரோட்டரி சங்கத்தினருக்கு பாராட்டுக்கள்.


சாலைகளில் கால்நடைகள்- விபத்துகள் ஏற்படும் அபாயம்.



 

 

மேட்டுப்பாளையம் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது தொடா் கதையாக உள்ளது. சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.



 



மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் கால்நடை வளா்ப்போரில் சிலர் தங்களது கால்நடைகளை பெரும்பாலும் ஓரிடத்தில் கட்டி வைப்பதே கிடையாது. இதனால், கால்நடைகள் உணவுக்காக சுற்றித்திரியும் அவலம் ஏற்படுகிறது.



 



உணவகங்கள், காய்கறி கடைகள் உள்ளிட்ட இடங்களைச் சுற்றி பெரும்பாலும் கால்நடைகள் திரிவதைக் காணலாம். உணவகங்கள், காய்கறி கழிவுகளை உண்பதற்காக அவை சுற்றிச் சுற்றி வருகின்றன. அதேபோல், குப்பைத் தொட்டிகளில் போடப்படும் கழிவுகளை உண்பதற்காகவும் கால்நடைகள் சுற்றி வரும். இவ்வாறு திரியும் கால்நடைகள் பெரும்பாலும் சாலைகளை ஆக்கிரமித்துவிடுகின்றன.



 



அதேபோல், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோா், சாலைகளில் கால்நடைகள் படுத்திருப்பது தெரியாமல், அவற்றின் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்களால் பெரிய அளவிலான காயமோ, உயிரிழப்புகளோ ஏற்படுகின்றன.



 



தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் கால்நடைகள் திடீரென்று ஓடும் பொழுது இருசக்கர வாகனங்களை தள்ளி விட்டு ஓடுகின்றன. மேலும் நடந்து செல்லும் மக்கள் மீதும் மோதுகின்றன. அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டாலும் சிறு காயங்களோடு தப்பி வருகின்றனர் மக்கள்.


 

சென்னையில் சுபஸ்ரீ போன்று இங்கும் உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர்தான் நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் என்று கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்.



 



பல இடங்களில் இது போன்று சாலையில் உலாவும் கால்நடைகளால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. நல்வாய்ப்பாக நமது ஊரில் இதுவரை இவ்வாறு நடக்க வில்லை.



 



உயிரிழப்பு ஏற்படும் முன் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். தொடா்ந்து, இதுபோன்று கால்நடைகளை உலாவவிடும் உரிமையாளா்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


63 ம் ஆண்டில் தமிழகம்


(தமிழகம்  எல்லைகள் வரையறுக்கப்பட்டு 63 ஆண்டுகள் ஆகிறது. இதனால்  இழந்ததே அதிகம் என்கிறார் கட்டுரையாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.தமிழ்நாடு நாள் உருவாக்கம் குறித்து பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்தியும், கட்டுரைகளை எழுதியும் வருபவர் திமுகவின் செய்தி தொடர்பாளரான மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.)


 




               தமிழக எல்லைகள் அமைந்த மொழிவாரி மாநிலமாக இன்றைய தமிழகம் அமைக்கப்பட்டு இன்றோடு 63 ஆண்டுகள் ( நவம்பர் 1, 2019 ) முடிகிறது. நவம்பர் 1, 1956ம் ஆண்டு இன்றைய தமிழகம் அதன் எல்லைகளோடு பிரிக்கப்பட்டு அமைந்தது.


'தமிழகம் 50' விழாவை 12 ஆண்டுகளுக்கு முன் மயிலை பாரதிய வித்யா பவனில் விழா எடுத்தேன். 'தமிழ்நாடு 50' என்ற எனது நூலும் வெளியிடப்பட்டது.


இதே நாளை ஆந்திரம் விசால ஆந்திரம் என்றும், கேரளம் நவகேரளம் என்றும், கர்நாடகா சம்யுக்த கர்நாடகம் என்றும், மகாராஷ்டிரம் சம்யுக்த மகாராஷ்டிரம் என்றும், குஜராத் மகா குஜராத் என்றும் கொண்டாடுகின்றன.



ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்த நாள் அமைந்தது குறித்து இதுவரை கவனிக்கப்படவில்லை. 2005ல் ஆனந்த விகடனில் இதுகுறித்து நான் எழுதிய கட்டுரையும் வெளியானபின்; நான் எடுத்த விழாவிற்கு பிறகே இதுகுறித்து தமிழக மக்கள் அறிந்து கொண்டனர்.


தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்த நிகழ்வினை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தியும் கலந்து கொண்டும் வருகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலை பாலு தலைமையில் 'மொழிவழி மாநிலம் அமைந்த நாள்' என்ற தலைப்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.



தெற்கே கன்னியாகுமரி அருகே நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு பகுதிகளை இழந்து அந்த பகுதி கேரளத்திற்கு சென்றதால் நெய்யாறு அணையில் தமிழகத்தின் உரிமை கேள்விக்குறியாக உள்ளது. நெல்லை மாவட்டம் அடவிநயினார், உள்ளாறு, செண்பகவல்லி அணை பிரச்சனை, அழகர் அணை பிரச்சனை (ஸ்ரீவில்லிப்புத்தூர்), தேவிகுளம், பீர்மேடு இழந்ததால் முல்லை-பெரியாறு பிரச்சனை, கொங்கு மண்டலத்தில் பாலக்காட்டு பகுதியில் உள்ள தமிழர்களுடைய கிராமங்களின் இழப்பால் பம்பாறு, சிறுவாணி, ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – புன்னம்பழா போன்ற நதிதீரப் பிரச்சனைகள், கர்நாடகத்திடம் கொள்ளேகால் போன்ற தமிழர்கள் பகுதிகளை இழந்த்தால் காவிரி, ஒகேனக்கல், தென்பென்னையாறு பிரச்சனை, ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லுர் பகுதிகளை இழந்த்தால், பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரிப் பிச்சனைகள் ஏற்பட்டுள்ளது.


கேரளத்தில் அட்டப்பாடி பிரச்சனை, கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையோர பிரச்சனையில் கேரள அரசு குடிமைப் பொருள் வழங்கும் அட்டை (ரேசன் அட்டை) வழங்கியது. இப்படியாக நாம் இழந்த பகுதிகளால் பல சிக்கல்களை கடந்த 62 ஆண்டுகால் சந்தித்து வருகிறோம். பலர் போராடவில்லை என்றால் திருத்தணி நம்மைவிட்டு ஆந்திரத்ற்கு செல்கிறோன். நமது எல்லைப் போராட்ட தலைவர்களையும், தியாகிகளையும் நினைவுகூற வேண்டிய நாள் இன்று.



கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய பல்வேறு போராட்டங்களில் துப்பாக்கிச் சூடும் நடந்ததுண்டு. அந்த தியாக வரலாறையெல்லாம் நாம் நினைவு கூறவேண்டும்.
1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதியில் மூன்று பேர் பலியாயினர்.
1. ஏ. தேவசகாயம், மங்காடு,
2. தி. செல்லையா, கீழ்க்குளம்,
3. கத்திக்குத்தில், பாகோடுவை சார்ந்த ஒருவரும் பலியானார்.



1950-ல் குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் வேகமெடுத்தன. இதற்கிடையில் தமிழக அமைச்சர் பக்தவச்சலமும், கொச்சி முதலமைச்சர் பாளையங்கோட்டையில் சந்தித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டபோது, குமரி மாவட்ட போராட்டக் குழுவினருக்கு அது உடன்பாடாக இல்லை. இதை எதிர்த்து 11/08/1954இல் குமரி மாவட்டத்தில் மறியல்களும், பொதுக் கூட்டங்களும் நடந்தது. அன்று காவல் துறையினர் 16 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்.
1. புதுக்கடை ஏ. அருளப்பன் நாடார்
2. கிள்ளியூர் எம். முத்துசாமி நாடார்
3.. தோட்டவாரம் எம். குமரன் நாடார்,
4. புதுக்கடை எம். செல்லப்ப பணிக்கர்,
5. தேங்காய்ப்பட்டணம் ஏ. பீர்முகமது,
6. தொடுவட்டி சி. பப்புப் பணிக்கர்,
7. நட்டாலம் எஸ். இராமையன் நாடார்,
8. மணலி, தோட்டவிளை ஏ. பொன்னப்பன் நாடார்
9. தோட்டவிளை, மணலி எம். பாலையன் நாடார்.



மேலும் இப்போராட்டத்தில் சங்கரன்நாடார் என்பவர் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்டார். வண்டி ஏற்றி ஒருவர் கொல்லப்பட்டார். பனை உச்சியிலிருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார். மொத்தம் 36 பேர் பலியானதாக தகவல்கள். பலர் கை, கால்களை இழந்தனர். குமரி மாவட்டமே அப்போது பதட்டமாக இருந்தது.



குமரி மாவட்டம் இரணியல் காவல் ஆய்வாளர் திரு. வி.எம். ஜார்ஜின் உத்தரவின் பேரில் இயங்கிய சிறப்பு தனி காவல் படை, காட்டுமிரான்டித் தனமாக நடந்து கொண்டது.
ஒரே நாளில், மாங்கரை, கொட்டேத்தி, பாலப்பள்ளம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் தெருக்களில் சென்று கொண்டிருந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது லத்தியால் அடித்தனர். திக்கணம்கோட்டை வரும்போது பள்ளியை விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவர்களிடம் அச்சத்தை உருவாக்கியது.



வடிவேல் என்ற மாணவன் சவரிமுத்து என்பவரின் வீட்டில் புகுந்து ஒளிந்துகொண்டார். போலீஸ் படை வீட்டுகுள் புகுந்துவிட்டதை கண்ட மாணவன் உயிருக்குப்பயந்து வெளியே சாடி ஓடிவிட்டான். அந்த பையன் யார் என்று சவரிமுத்துவிடம் போலீஸ் ஆய்வாளர் கேட்டார். தனக்குத் தெரியாது என்று சவரிமுத்துக் கூறியதால் தனி போலீஸ் படையினராலும், ஆய்வாளராலும் லத்தியால் அடித்து உதைக்கபட்டார் சவரிமுத்து. குறுக்கிட்ட அவன் சகோதரனும் தாயும் அதேபோன்று தாக்கப்பட்டனர். இச்செயலை கண்டித்த, திருமண வயதுக்கு வந்த, அவனது இளைய மகள் கன்னத்தில் அறையப்பட்டாள்.



அவளது காதில் கிடந்த அணிகலன் துண்டுதுண்டாக நொறுங்கியது. மூன்று பற்களும் ஆட்டம் கொடுத்தன. 10 தினங்களுக்கு முன் தனது 11-வது குழந்தையைப் பெற்றெடுத்த அவன் மனைவி இரக்கம் காட்டும்படி கெஞ்சினாள். அவள், பூட்ஸ் காலால் நெஞ்சில் உதைக்கப்பட்டாள். முடிவில், சவரிமுத்து போலீஸ்வேனில் கொண்டுசெல்லப்பட்டார். கொட்டேத்திச் சந்தையில் போலீசார் புகுந்து கலகம் விளைவித்தனர். அன்றாட பொருட்களை வாங்கவும் விற்கவும் அங்கு கூடியிருந்த 1000-க்கும் மேற்பட்ட பெண்களை துரத்தி அடித்தனர். பெண்கள் அலங்கோலமான முறையில் உயிருக்குப்பயந்து அங்குமிங்குமாக ஓடினர். இப்படியான ரணங்களும், அவலங்களும் அன்றைக்கு குமரி மண்ணில் நடந்தன.



கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டையில் சரிபாதி என நாலரைத் தாலுகாக்கள் திருவிதாங்கூர் பகுதிகளில் தமிழகத்தோடு இணைந்தன. குமரி மாவட்ட எல்லைப் போராட்டத்தில் பி.எஸ்.மணி, நேசமணி போன்றோர் செய்த தியாகங்களை எல்லாம் மறக்கமுடியாது.



விடுதலைப் போரில் போராடினோம். விடுதலை பெற்றோம். தமிழர் மண்ணை மீட்க போராடிய போது, தமிழகத்தின் குரலை மத்திய அரசு புறந்தள்ளியது. நம்முடைய நியாயங்கள் மறுக்கப்பட்டன. நம்முடைய தமிழ் மண்ணை கேரளம், கர்நாடகம், ஆந்திரத்துடன் இழந்தோம். இறுதியாக கச்சத்தீவையும் இழந்தோம். இப்படியெல்லாம் மண்ணை இழந்து 63 ஆண்டுகள் கடந்துவிட்டன


3ம் ஆண்டில் நமது மேட்டுப்பாளையம்

இரண்டு ஆண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது நமது மேட்டுப்பாளையம் மாத இதழ்.


நமது மேட்டுப்பாளையம் பற்றி, நமது வரலாறு, அடையாளங்கள், அரசியல், சாதனையாளர்கள், நமது தேவைகள் பற்றிய செய்திகளோடு நமது மேட்டுப்பாளையம் இதழை செப்டம்பர் 2017 அன்று வெளியிட துவங்கினோம். இதழ் துவக்கும் பொழுது அச்சமும் கலக்கமும் இருந்தது. ஆனால் உங்கள் ஆதரவோடு வெற்றிகரமாக இரண்டு ஆண்டை நிறைவு செய்திருக்கிறது நமது மேட்டுப்பாளையம் மாத இதழ்.


உள்ளூர் இதழாக இருந்தாலும் 25,000 மேற்பட்ட வாசகர்களை சென்றடையும் சாதனையையும் நமது இதழ் நிகழ்த்தியுள்ளது. மேட்டுப்பாளையம் வரலாற்றையும், சாதனைகளையும் ஆவணப்படுத்தும் இந்த முயற்சியில் உங்கள் அனைவரையும் இணைந்து பணியாற்ற அன்புடன் அழைக்கிறோம்.


இந்த சாதனைக்கு உடன் உழைத்த, ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.


வாருங்கள், இணைந்து பயணிப்போம்.


அன்புடன்,


உ.மஸ்தான்


ஆசிரியர்


“ரெயின்போ” வெங்கட்ராமன் அவர்களுடன் நேர்காணல்

 



                                      கல்வியாளர் திரு.வெங்கட்ராமன்அவர்கள் நேற்று (25.08.2019)இரவு 11.20 மணி அளவில் நம்மிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றார். ஆயிரக்கணக்கான நல்ல மாணவர்களை உருவாக்கியவர் அவர். படிக்கிற மாணவர்கள் எங்கும் படிப்பார்கள். ஆனால் பள்ளிகளில் இடை நின்ற பல மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க காரணமாக இருந்தவர் அவர். அவரை கல்வியாளர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. நகரின் அனைத்து சமூக நல பணிகளிலும் அவரின் பங்கு இருந்தது.  அவரின் மரணம் நமக்கு மிகப்பெரிய இழப்பு.


டந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் அவரின் நேர்காணல் நமது மேட்டுப்பாளையம் மாத இதழில் வெளியானது. அவரின் நினைவாக அந்த நேர்காணல் கீழே.


 


ரெயின்போ கல்வி நிறுவனத்தின் முதல்வர், சிறந்த கல்வியாளர், மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர், சிறந்த பேச்சாளர், சமூக ஆர்வலர் என பல பரிமாணங்களுக்கு சொந்தக்காரரான ரெயின்போ திரு. வெங்கட்ராமன் அவர்களுடன் இந்த மாத நேர்காணல்.   


மேட்டுப்பாளையத்திற்கு உங்கள் வருகை எப்படி ? எப்போது ?   


எனது சொந்த ஊர் தஞ்சாவூர் அருகில் உள்ள திருவையாறு. நான் திருச்சி தேசிய கல்லூரியில் பி.காம் படித்து முடித்த சமயத்தில், மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணிக்கான விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்தேன். எனக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. இருப்பினும் அன்று இருந்த பள்ளி தாளாளருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அந்த வேலையிலிருந்து விலகி ரெயின்போ கல்வி நிறுவனத்தை தொடங்கினேன். இதன் வளர்ச்சிக்கு அப்போது எல்லோரும் உதவிசெய்தனர். இக்கல்வி நிறுவனம் சிறப்பாக செயல்பட மாணவர்கள் முக்கிய காரணம். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது கூட, என்னிடம் பயின்ற மாணவர்கள் எனக்காக மருத்துவ செலவினை ஏற்க தயாராயிருந்தனர். மேட்டுப்பாளையம் என்னை வாழவைத்த ஊர் ஆகும்.


ரெயின்போ கல்வி நிறுவனம் பற்றி கூறுங்களேன் ?.           


அசுர உழைப்பு உழைத்தேன் என்று  சொல்லலாம். காலை ஐந்து மணிக்கு வகுப்பு எடுக்க துவங்கினால், இரவு பதினோரு மணி வரை வகுப்புகள் நீளும். ரெயின்போ கல்வி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று பயன் பெற்றுள்ளனர். இன்றைக்கு அந்த மாணவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாவிட்டாலும் நன்றாக இருப்பார்கள்.


மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் சாதனைகள் ?     


1988ஆம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறேன். இன்றைக்கும் உள்ள நுகர்வோர் சங்க உறுப்பினர்கள் என்னையே தொடர்ந்து தலைவராக இருக்க சொல்கின்றனர். கோவையில் முதன்முதலில் நுகர்வோர் நீதிமன்றம் அமைக்கப்பட்ட பின்னர் முதல் வழக்கே, மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்காகும். சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கும் வசதிக்கான கட்டணம் 500 கி.மீ ரூபாய் 20ம், 500 கி.மீ. குறைவாக இருந்தால் ரூபாய் 15 வாங்க வேண்டும். மாறாக மேட்டுப்பாளையத்தில் டிக்கெட் புக் செய்தால் ரூபாய் 20 கட்டணமாக வாங்குவார்கள். நாங்கள் இதை ரூபாய் 15 தான் வசூல் செய்யவேண்டும், ஏனென்றால் சேரன் எக்ஸ்பிரஸ் கோவையிலிருந்து சென்னைக்கு செல்கிறது. இது 500 கி.மீ. தூரத்திற்கு குறைவானது, எனவே அதிக கட்டணம் வாங்க கூடாது என்று ரயில்வே ஜெனரல் மேனேஜர் அவர்களுக்கு 13 கடிதங்கள் அனுப்பியிருந்தோம். அதையெல்லாம் நீதிமன்றத்தில் கூறி முதல் வழக்கில் வெற்றி பெற்றோம்.


அடுத்து போக்குவரத்து துறையில் 1990-1991ஆண்டுகளில்  10 பைசாவை குறைக்க வழக்கு நடத்தியிருக்கிறோம்.  1998ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் கோவைக்கு 37 கி.மீட்டருக்கு கட்டணம் நிர்ணயம் செய்திருந்தனர். ஆனால் நெடுஞ்சாலை துறை மேட்டுப்பாளையம் - கோவை 35 கி.மீ. என பலகை வைத்திருந்தனர். இதையே நாங்கள் நீதிமன்றத்தில் கூறினோம். ஆனால் போக்குவரத்து துறை 36 கி.மீட்டருக்கு கட்டணம் வாங்குவதாக கூறினார்கள். இதுவே எங்களது வெற்றியாகும். இருந்த போதும் போக்குவரத்து துறை சாய்பாபா காலனி வழியாக செல்லாமல் வடகோவை மேம்பாலம் வழியாக செல்வதாக கூறி வழக்கில் வெற்றி பெற்றனர். நாங்கள் இந்த வழக்கில் தோல்வியடைந்தோம்.  


மேட்டுப்பாளையத்தில் இருந்து வடகோவை பேருந்து நிலையம் செல்வதற்கும், காந்திபுரம் செல்வதற்கும் ஒரே பேருந்து கட்டணமே வசூலித்து வந்தார்கள். எங்கள் நுகர்வோர் இயக்கம் மூலம் எடுக்கப்பட்ட முயற்சிகள் மூலம் வடகோவை பேருந்து நிலையம் செல்வதற்கான கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அடுத்ததாக மாவட்ட ஆட்சியராக திரு. சங்கர் அவர்கள்  இருந்தபோது போலி ரேஷன்  கார்டுகளை பிடிக்க எங்களது நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்துக்கு அனுமதி தந்தார். இது அரசு எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவிலேயே போலி ரேஷன் கார்டுகளை பிடிக்க அனுமதி பெற்ற  சங்கம் எங்களுடையது மட்டுமே.


மேலும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்  பள்ளி கல்லூரிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் குஞ்சப்பனை கிராம பகுதி மக்களிடமும் நடத்தியிருக்கிறோம். இப்போது வரை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டங்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை களைவதற்கு உதவியாக வருகிறோம்.


மேட்டுப்பாளையத்தின் பொதுவான சமூக நல அமைப்புகளில் உங்களின் பங்களிப்பு பற்றி...?


அறிவியல் இயக்கத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். பவானி ஆறு மாசுபடுதலுக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். மேட்டுப்பாளையம் கோவை பாசஞ்சர் ரயிலை அதிக முறையில் இயக்கக்கோரி 2009-2010ஆம் ஆண்டு திரு.மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்த போது நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பினோம். டெமோ ரயில் இயக்குவதாக எங்களுக்கு பதில் கடிதம் வந்தது. பிறகு டி.டி.ஆர் அவர்களின் மக்கள் நல பேரவையின் சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். ரயில் மறியல் போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளேன். இன்றைக்கு பயணிகள் ரயில் அதிக முறை இயங்குவதற்கு எங்களது நுகர்வோர் பாதுகாப்பு இயக்கமும் ஒரு காரணம். எனக்கு அரிமா சங்கம் சார்பில் சமூக ஆர்வலர் என்ற விருதையும் பெற்றிருக்கிறேன்.


பவானி நதிநீர் மாசுப்படுவது குறித்து நமது  பகுதி மக்களுக்கு உள்ள புரிதலும் செயல்பாடுகளும் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?


பொது மக்களிடம் இன்னும் சரியான புரிதல் இல்லை என்றே நினைக்கிறேன். சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் இந்த விசயத்தை ஆழமாக நல்ல முறையில் மக்களுக்கு சொல்ல வேண்டும். இதன் மூலம் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும். அதேநேரத்தில் பவானி நதிநீர் இயக்கங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். நான் பவானி நதியை காப்பதற்காக எந்த கூட்டம் நடந்தாலும் கலந்து கொள்கிறேன். சமீபத்தில் கூட மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கலந்து கொண்டு பவானி நதிநீர் மாசுபாடு குறித்து பேசியிருக்கிறேன்.


கடந்த ஐம்பதாண்டு காலத்தில் மேட்டுப்பாளையத்தின் வளர்ச்சி பற்றி கூறுங்கள் ?  


1967ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் நமது ஊர் வளர்ந்திருக்கிறது. ஆனால் இன்றைய மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் பெரிய அளவில் வளரவில்லை என்றே கூறலாம். இன்றைய இளைஞர்கள் இதை கணக்கிலெடுத்து நமது ஊர் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும்.


உங்களுடைய மாணவர்களுக்கு நீங்கள் சொல்வது என்ன ?


என்னுடைய மாணவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் இந்த ஊரின் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும். பல்வேறு சமூக நல அமைப்புகளில் இணைந்து மேட்டுப்பாளையம் முன்னேற்றம் அடைவதற்கு உதவ வேண்டும்.     


உங்களுடைய ஆசிரியர் பணியைப்பற்றி கூறுங்கள் ? 


1967 காலகட்டத்தில் வருமானம் குறைவாக இருந்தாலும் ஆசிரியர் பணியை நான் விரும்பி தேர்ந்து எடுத்தேன். எனக்கு அப்போது ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல வேலைகள் கிடைத்தபோதும், அதை விடுத்து 192 ரூபாய் சம்பளமுள்ள ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்தேன். இதனால் பணம் சம்பாதிக்க முடியாவிட்டாலும், ஆயிரக்கணக்கான மாணவர்களின் அன்பை பெற்றுள்ளேன். இப்போது எனது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை எடுத்து வருகிறேன். எனது மருத்துவ செலவுகளை முகம் தெரியாத மாணவர்கள் ஏற்க தயாராக உள்ளனர் என்பது எனக்கு பெருமையே. எனது கடைசி நிமிடம் வரை ஆசிரியர் தொழிலைச் செய்யவேண்டும் என்பதே எனது ஆசை.


ரோட்டரி சங்கத்தின் புதிய முயற்சி

ரோட்டரி சங்கத்தின் புதிய முயற்சி


பெருமையடையும் மேட்டுப்பாளையம்



       ரோட்டரி சங்கம், மேட்டுப்பாளையத்திற்கு செய்யும் சமூக பணிகள் பல. மெட்ரோ பள்ளி, எரிவாயு மயானம்,  ஆட்டிசம் குழந்தைகளுக்கான பள்ளி, செயற்கை கைகள் பொருத்தும் முகாம், பேருந்து நிலைய நேர கோபுரம் என்று நீண்....டு கொண்டே இருக்கிறது இந்த பட்டியல். இப்போது மேட்டுப்பாளையத்தை தாண்டி 100 கிலோ மீட்டர் சுற்றளவிற்கும் சேவையை விரிவுபடுத்தி நமது ஊருக்கு பெருமை சேர்க்க உள்ளனர், மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தினர்.


       பெண்கள் தங்கள் குடும்பத்தினர் மீது காட்டும் அக்கறையில் சிறிதளவும் கூட தங்கள் மீது காட்டுவதில்லை. பெண்களை பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும் நோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய். இந்நோயை ஆரம்ப கட்டத்திலேயே கணடறிந்து சிகிச்சை அளித்தால், எளிதாக குணப்படுத்த முடியும். ஆனால் தங்கள் நலனில் அக்கறை காட்ட இயலாத சூழலில் உள்ள பெண்கள் பெரும்பாலும் நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வருகிறார்கள். இது அவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. இதற்காக முன்கூட்டியே இந்த நோயை கண்டறியும் விதத்தில் பெண்களின் வீட்டுக்கு அருகே முகாம் நடத்தி, சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து தர திட்டமிடப்பட்டு உள்ளது. மார்பக புற்றுநோயை கண்டறியும் மேமோகிராம் என்ற இயந்திரம் பொருத்தப்பட்ட பிரத்யேக வாகனம் ஒன்று மூன்று கோடி ரூபாய் செலவில் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தினர் வாங்க உள்ளனர். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் இது தொடர்பாக கையெழுத்தாகி உள்ளது.


இது குறித்து மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் மரு.விஜயகிரி மற்றும் இந்த திட்டத்தின் தலைவர் சுரேஷ் ஆகியோரிடம் நமது மேட்டுப்பாளையம் இதழுக்காக பேசினோம்.


ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்தப் போகிறீர்கள். இதற்கான அவசியம் என்ன?


ஒரு பெண்ணின் மரணம் அந்த குடும்பத்தை வெகுவாக பாதிக்கிறது. இப்போது குடும்பத்தை நிர்வகிப்பது மட்டும் இன்றி பொருளாதார ரீதியிலும் பெண்களின் பங்கு முக்கியமாக இருக்கிறது. இப்போதைய நிலையில் மார்பக புற்றுநோய் வரும் பெண்கள் இருவரில் ஒருவர் சிகிச்சை அளிக்க முடியாமல் இறக்கும் சூழல் உள்ளது. இதை மாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு.



இந்த திட்டத்தின் பெயர் HEAL என்று வைத்து இருக்கிறோம். H என்பது HIGH AWARENESS, மக்களிடம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துதல், E என்பது EARLY DETECTION அதாவது நோயின் ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறிவது, நோய் முற்றிய நிலையில் ஒருவர் சிகிச்சை பெறும் போது ரூபாய் எட்டு லட்சம் வரை செலவிட வேண்டி உள்ளது. ஆரம்ப கட்டத்தில் நோய் கண்டறியப்பட்டால் சிகிச்சை எளிது. A என்பது AFFORTABLE TREATMENT, முகாமில் கண்டறியப்படும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் இலவசமாக செய்ய ஏற்பாடு செய்யப்படும். மேலும் L என்பது Low morbidity and Low mortality அதாவது இறப்பு சதவீதத்தையும், நோயின் பாதிப்பையும் குறைப்பது. இதுதான் HEAL திட்டத்தின் நோக்கம்.


எப்படி மார்பக புற்றுநோயை கண்டறிய முடியும்?


மேமோகிராம் என்கிற கருவி மார்பக புற்றுநோயை கண்டறிய உதவுகிறது. இந்த கருவியின் விலை சுமார் ரூபாய் ஒண்ணரை கோடிக்கும் மேல். கதிர்வீச்சு குறைவாக இருக்கும் கருவி இது. கோவையிலேயே வெறும் நான்கு அல்லது ஐந்து மருத்துவமனைகளில் மட்டுமே இந்த கருவி இருக்கிறது. இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனத்தை 100 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள பகுதிகளுக்கு கொண்டு சென்று, அங்குள்ள தன்னார்வ அமைப்புடன் இணைந்து அங்குள்ள பெண்களுக்கு சோதனை நடைபெறும்.


இந்தியா முழுவதும் ஒரு சில இடங்களில் இது போன்ற மேமோகிராம் வாகனங்கள் இயங்கினாலும், மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதோடு மட்டும் இன்றி அவர்களின் மேல் சிகிச்சையையும் தொடர்ந்து கண்காணிக்க இருக்கிறது. வேறு இடங்களில் கண்டறிதல் மட்டுமே நடக்கும்.


யாருக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்?


பத்து வயதுக்குள் பூப்பெய்திய பெண்கள், 50 வயதுக்குப் பிறகும் மெனோபாஸ் நிலையை அடையாதவர்கள், 35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பம் தரிப்பவர்கள், உடல்பருமனாக இருப்பவர்கள், பல வருடங்களாகக் கருத்தடை மாத்திரை உட்கொள்பவர்கள், குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் பாதிப்பு  ஏற்பட்டு இருந்தால், மெனோபாஸ் நிலையில் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள்,  மதுப்பழக்கம் அல்லது  புகைப்பழக்கம் உடையவர்கள், தாய்ப்பால் புகட்டாதவர்கள்  ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்களுக்கு மட்டுமே வரும் என்றும் சொல்ல முடியாது. பெண்கள் குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பல உடலுறுப்புகளின் வளர்ச்சி பூர்த்தியாகிவிடும். ஆனால், மார்பகம் அப்படியல்ல, மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.


மார்பகத்தில் வரும் அனைத்து கட்டிகளும் புற்றுநோய் கட்டிகள் அல்ல. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சிகிச்சை செய்வது எளிது. பயம் கொள்ள தேவை இல்லை.


இந்த திட்டத்திற்கு செலவிடப்போகும் தொகை எவ்வளவு?


மேமோகிராம் கருவி மற்றும் வாகனத்துடன் ஐந்து ஆண்டுகள் இயக்குவதற்கு  சுமார் மூன்று கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டு இருக்கிறோம்.


எங்கள் ஒவ்வொரு ரோட்டரி உறுப்பினரும் நிதி உதவி அளிக்கின்றனர். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்புடன் இருக்கின்றனர். தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர். கிட்டத்தட்ட 25 சதம் இலக்கை அடைந்து விட்டோம். பல்வேறு ஊர்களில் உள்ள ரோட்டரி மற்றும் இன்னர் வீல் சங்கங்களிடம் உதவி கேட்டு இருக்கிறோம். இந்த திட்டம் பற்றிய செய்தி பரவலாக பொதுமக்களிடம் சென்றால் அவர்களும்  உதவுவார்கள் என்று நம்புகிறோம்.


என். சி .அரோமேட்டிக் நிறுவனம் சார்பில் இந்த திட்டத்திற்கு ரூபாய் 24 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.


 


பெண்களுக்கு ஆபத்தை மார்பக புற்றுநோய் மட்டும் அல்ல, கர்ப்பவாய் புற்றுநோயும் ஏற்படுத்துகின்றன. வரும் காலத்தில் கர்ப்பவாய் புற்றுநோயையும் கண்டு பிடிக்கும் விதத்தில் இந்த வாகனத்தை செயல்படுத்தும் திட்டமும் உண்டு. அப்படி நடக்கும் போது புற்றுநோயால் இறக்கும் பெண்களின் எண்ணிகையை வெகுவாக குறைக்க முடியும். அதை நோக்கிய பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம்.


எப்போது இந்த கருவி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்?


நாம் பணம் செலுத்தி ஆறு மாதத்திற்கு பிறகு தான் இந்த இயந்திரம் கிடைக்கும். அதற்கு பின்பு அரசு சான்றிதழ் பெற வேண்டும். பிறகு வாகனத்தில் பொருத்த வேண்டும் போன்ற பணிகள் இருக்கின்றன. அடுத்த இரண்டு மாதத்திற்குள் மேமோகிராம் கருவிக்கான தொகையை செலுத்த வேண்டும் என்கிற இலக்கை மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வைத்து இருக்கிறோம்.


இந்த திட்டத்தை மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் மற்றும் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை செயல்படுத்தினாலும் இதற்கு உறுதுணையாக இருப்பவர் 3202 ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் கார்த்திகேயன் (திருப்பூர் ஏ.வி.பி கல்வி நிறுவனங்களின் தலைவர்). இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க மிகுந்த ஈடுபாடு காட்டி வரும் அவரின் பணி மிக முக்கியமானது.


 


நீங்களும் உதவலாம்.


இந்த உயிர்காக்கும் உன்னத முயற்சியில் உங்கள் பங்கும் இருக்கட்டும். இணைய விரும்புவோர், உங்கள் நன்கொடைகளை அனுப்பலாம். அனைத்து நன்கொடைகளுக்கும் 80G பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.


மேலும் விபரங்களுக்கு ரோட்டரி சங்க மேட்டுப்பாளையம் கிளை பொருளாளர் சீனிவாசன் அவர்களை 93622-22391 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Members of the public who wish to contribute to this noble cause can do so in one of two ways. All donations are eligible for India income tax exemption under Section 80G. After you send the amount, please contact the Rotary Club Treasurer Rtn. Srinivasan (93622-22391) to get the receipt issued. Please send only in Indian Rupees. Please do not send foreign exchange directly


Write a cheque in favour of


METTUPALAYAM ROTARY CLUB TRUST


and send to the following address:


Mobile Mammogram Unit Project Office
C/O Ramesh & Co
235, Ooty Main Road
Mettupalayam – 641301


NEFT/RTGS/IMPS to the following account:


Account Number: 520101015643197
Account Name : Mettupalayam Rotary ClubTrust
Bank: Corporation Bank
Branch: Mettupalayam
IFSC Code: CORP0000016


 


Featured Post

கிராமியக்கலைஞர் பத்திரப்பன்

கிராமியக்கலைஞர்  பத்திரப்பன்          மேட்டுப்பாளையம், தாசம்பாளையத்தில் வசிக்கும் கிராமியக் கலைஞர்  திரு.பத்திரப்பன்  (வயது 87) . இவருக்கு த...